உக்ரைன் போருக்குப் பின்னர் இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு 25% வரி விதித்துள்ளது, இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் போர் தொடங்கிய 2022-ஆம் ஆண்டிலிருந்து இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்து வருகிறது. இது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக, ரஷ்ய எண்ணெய் தொடர்புடைய இந்திய இறக்குமதிகள் மீது அமெரிக்கா 25% வரி விதித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு ஆகஸ்ட் 27, 2025 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு கொள்கை மற்றும் உலகளாவிய வர்த்தக இயக்கவியல் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.

ரஷ்ய எண்ணெய்க்காக இந்தியா செலவழிக்கும் தொகை

பின்லாந்தின் எரிசக்தி நிறுவனமான CREA வெளியிட்ட அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு சுமார் ரூ. 132 பில்லியன் (தோராயமாக ரூ. 13.39 லட்சம் கோடி) செலவழித்துள்ளது.

இது ரஷ்யாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதி வருவாயில் கிட்டத்தட்ட 20% ஆகும். மேற்கு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, ரஷ்ய எண்ணெய் குறைந்த விலையில் கிடைப்பதால், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் அதை அதிக அளவில் வாங்கி வருகின்றன.

அமெரிக்காவுக்கு இந்தியாவின் பதிலடி

அமெரிக்க கருவூலத் துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் இந்தியாவும் சில செல்வந்தர்களும் "ஏற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பவாத வர்த்தகத்தில்" ஈடுபட்டு, $16 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இந்த லாபக் கணக்கீடு குறித்த வழிமுறை தெளிவாக இல்லை.

அமெரிக்காவின் இந்த புதிய அபராத வரியை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது. இது நியாயமற்றது என்றும், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும் என்றும் இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ரஷ்ய நிலக்கரி இறக்குமதி

இந்தியாவின் ரஷ்ய இறக்குமதிகள் கச்சா எண்ணெயுடன் நின்றுவிடவில்லை. 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியா சுமார் ரூ. 16 பில்லியன் மதிப்பிலான நிலக்கரியையும் ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளது. இதனால், இந்தியாவின் மொத்த ரஷ்ய புதைபடிவ எரிபொருள் இறக்குமதி ரூ. 148 பில்லியனாக உயர்ந்துள்ளது.

சீனா ரூ. 268 பில்லியன், ஐரோப்பிய ஒன்றியம் (EU) ரூ. 213 பில்லியன், இந்தியா ரூ. 148 பில்லியன், துருக்கி ரூ. 111 பில்லியன் மதிப்பிலான எரிபொருட்களை வாங்குகின்றன.