குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரில் இந்தியாவின் இரண்டாவது பெரிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அடிப்படையிலான விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இது விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை நவீனமயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.
குஜராத் மாநிலம் வதோதராவில் சுற்றுச்சூலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. 160 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்த விமான நிலையம், பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், இந்த விமான நிலையத்தின் கண்ணாடி கூரை அமைக்கப்பட்டுள்ளது.
கரும்பு கூழைக்கொண்டு முக்கிய பிரமுகர்களுக்கான பகுதிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விமான நிலைய வளாகம் முழுவதும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் மற்றும் புல்வெளிகள் அமைக்கப்பட்டு பசுமையான சூழல் காணப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த விமான நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய சுற்றுசூழல் பாதுகாப்பு மிகுந்த விமான நிலையம் என்ற சிறப்பு, வதோதரா விமான நிலையத்திற்கு கிடைத்துள்ளது. மிக விரைவில் இது திறக்கப்பட்டு, பயணிகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
