காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் தீட்வால் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியையொட்டி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் நள்ளிரவு அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

பயங்கரவாதிகளை ஊடுருவ வைப்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் 2 இந்திய வீரர்களும் பெண் ஒருவரும் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. பசு தொழுவத்தின் மீது குண்டு விழுந்ததால், 6 கால்நடைகள் பலியாயின.

இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், பொதுமக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை யொட்டி ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மற்றும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட சண்டை நேற்று அதிகாலை 3 மணி வரை நீடித்தது. இதில், பாகிஸ்தான் சிப்பாய்கள் 10 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகளின் 3 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.

மேலும் இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 20 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேபோல், பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறு பீரங்கிகள் உதவியுடன் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் இந்திய தரப்பில் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் படையினரின் பதுங்கு குழிகள் சேதம் அடைந்தன. கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டி உள்ள பகுதிகள் மீது பாகிஸ்தான் படையினர் பீரங்கி தாக்குதல் நடத்தினர். அங்கு நடந்து வரும் கட்டுமான பணியை நிறுத்தும் நோக்கத்தில் இந்த தாக்குதலை நடத்தினார்கள். இதில், ஒரு வீட்டின் மீது குண்டு விழுந்ததால் அந்த வீடு தீப்பிடித்துக் கொண்டது. அந்த வீட்டின் உரிமையாளரான சையது அலி என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.