உக்ரைனில் தொடர்ந்து நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அங்கு வசிக்கும் மாணவர்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி இந்தியா தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

உக்ரைனில் தொடர்ந்து நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அங்கு வசிக்கும் மாணவர்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி இந்தியா தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என ரஷ்யா கூறினாலும், எல்லையில் அதிகளவில் ராணுவத்தைக் குவித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் உக்ரைனில் எல்லையில் இருக்கும் ரஷ்யா வீரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. இதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. சுமார் 50% ரஷ்யா ராணுவம் உக்ரைன் மீது போர் தொடுக்கத் தயாரான நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது அடுத்த சில நாட்களில் எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா போரை ஆரம்பிக்கும் என அமெரிக்க அதிபர் பைடன் உட்பட மேற்குலக நாடுகளின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உக்ரைன் எல்லையில் ரஷ்யா போர் பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்குப் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் உக்ரைன் நாட்டில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி இந்தியா தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் நாட்டிற்கான இந்திய தூதரகம் தனது ட்விட்டரில், உக்ரைனில் தொடர்ந்து நிலவும் பதற்றமான மற்றும் நிச்சயமற்ற நிலையை கருத்தில் கொண்டு, அங்கிருக்கும் அத்தியாவசியமற்ற பணியாளர்கள் அனைவரும் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள். உக்ரைன் நாட்டில் இருந்து இயக்கப்படும் பயணிகள் விமானம் அல்லது சிறப்பு விமானங்களை இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்திய மாணவர்கள் பட்டய விமானங்கள் குறித்த புதுப்பிப்புகளுக்கு அந்தந்த மாணவர் தங்களை அழைத்து வந்த காண்டிராக்டர்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்த புது தகவல்கள் உடனடியாக உக்ரைனுக்கான இந்தியத் தூதரகத்தின் இணையதளத்திலும் சமூக வலைத்தள பக்கத்திலும் பகிரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தால் அது சர்வதேச அளவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். போரைத் தவிர்க்கக் கடைசிக் கட்ட முயற்சிகள் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் விவகாரம் தொடர்பாகப் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தொலைப்பேசி வழியாக உரையாடினார். இருப்பினும், குறிப்பிட தகுந்த அளவு முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை எனத் தொடர்ந்து கூறி வரும் புதின், ரஷ்யாவின் பாதுகாப்பு கருதியே நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், உக்ரைன் நாட்டை ஒருபோதும் நேட்டோவில் சேரக்கூடாது, கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ படைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் உட்பட 5 கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கு மேற்குலக நாடுகள் மறுத்துள்ள நிலையில், பதற்றம் அதிகரித்து வருகிறது.