மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திக்கவுள்ளனர்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இனக்கலவரம் வெடித்தது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் வெடித்த வன்முறை காரணமாக அம்மாநிலம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது.
மணிப்பூர் வன்முறையில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அம்மாநிலத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் பலரும் சென்று வருகின்றனர்.
இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதில், வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தையும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன.
பள்ளி சேர்க்கைக்கு ஆதார் கட்டாயமில்லை: உறுதிப்படுத்திய மத்திய அரசு!
இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழு சென்றது. கடந்த 29, 30 ஆகிய தேதிகளில் அம்மாநிலத்தில் முகாமிட்டிருந்த எம்.பி.க்கள் குழு, அம்மாநிலத்தின் நிலைமை குறித்து ஆய்வு செய்தது. பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தது. இதையடுத்து, மணிப்பூர் சென்று வந்த எம்.பி.க்கள் குழு அம்மாநில நிலைமை தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்களிடம் விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திக்கவுள்ளனர். மணிப்பூர் சென்று வந்த இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவும் அவர்களுடன் செல்லவுள்ளது. அப்போது, மணிப்பூரின் நிலைமை குறித்து குடியரசுத் தலைவரிடம் அவர்கள் எடுத்துரைக்க உள்ளனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்கள், மக்கள் எந்தவகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த என்ன செய்யலாம் என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர்கள் எடுத்துரைப்பர் என தெரிகிறது.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். அப்போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவர் விளக்கம் அளித்த நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்கள் குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கவுள்ளனர்.
