பாகிஸ்தான் தீவிரவாதிக்‍கு ஆதரவு : சீனாவுக்‍கு இந்தியா கண்டனம்!

இந்தியாவில் தீவிரவாத செயல்களை தூண்டிவரும் பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்‍கும் இந்தியாவின் முயற்சிக்‍கு சீனா முட்டுக்‍கட்டை போட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.நாவில் இந்தியா பரிந்துரை செய்த தீர்மானத்தை சீனா தடுத்து நிறுத்தியுள்ளது.

இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு தீவிரவாத செயல்களை பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரே காரணம் என இந்தியா ஆதாரத்துடன் குற்றம்சாட்டி வருகிறது. மேலும், பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வரும் அவரை பாகிஸ்தான் அரசு நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்‍க வகை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புக்‍ கவுன்சிலில் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. பாதுகாப்புக்‍ கவுன்சிலில் உள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால், சீனா இந்தியாவின் பரிந்துரையை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்‍கை இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்‍கையில் சீனா இரட்டை நிலையை கடைப்பிடிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் திரு. விகாஸ் சொரூப் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.