India@75:ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி என்ற இயக்கத்திற்கு சத்குரு ஆதரவு! சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்றவேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள சத்குரு, ஈஷா யோகா மையத்தில் தேசிய கொடி ஏற்றியதுடன், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் 15ம் தேதியான நாளைய தினம் இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
பிரதமர் மோடியின் அழைப்பிற்கு மதிப்பு கொடுத்து நாட்டு மக்கள் வீட்டு வாசலில் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் தங்கள் வீடுகளின் வாசலில் தேசிய கொடியை ஏற்றி அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு முன்னுதாரணமாக திகழ்ந்தனர். அனைத்து தரப்பினரிடமிருந்தும், பிரதமர் மோடியின் அழைப்புக்கு நல்ல வரவேற்பும் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க - Har Ghar Tiranga: tiranga flag: 10 நாட்களில் ஒரு கோடி தேசியக் கொடி விற்று இந்தியா போஸ்ட் சாதனை
அந்தவகையில், சத்குரு ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்றும் முன்னெடுப்புக்கு ஆதரவு அளித்துள்ளார். தேசிய கீதம் பாடி சத்குரு பதிவிட்டுள்ள டுவீட்டில், கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட பாரதத்தாயே.. நீ எங்கள் இதயங்களின் துடிப்பாகவும், எங்கள் உதடுகளில் பாடலாகவும், உலகிற்கு கலங்கரை விளக்கமாகவும் இருக்கிறாய் என்று பதிவிட்டுள்ளார்.
ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கோடி ஏற்றும் முன்னெடுப்புக்கு ஆதரவளித்து பேசிய சத்குரு, நம் நாட்டின் அடையாளம் தேசிய கொடி. சாதி, மதம், இனம், எல்லைகள் கடந்து நம்மை இணைக்கும், நமது ஒற்றுமையையும், தேசப்பற்றையும் பறைசாற்றும் சின்னம் தேசிய கொடி. வலிமையான, வளமான பாரதம் என்ற நமது லட்சியத்தை நோக்கி உந்தித்தள்ளுவது தேசிய கொடி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் வளர்ச்சி, வளம் ஆகியவற்றிற்கு ஒவ்வொரு குடிமகனும் தேசப்பற்றுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றார். இந்திய அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துகொண்டிருக்கும் அதேவேளையில், 350-400 மில்லியன் பேர் இந்தியாவை விட்டு வெளியேறியிருக்கின்றனர். பெரும்பாலான மக்கள் இன்னும் வறுமை கோட்டுக்குக் கீழ் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டியது அவசியம் என்று சத்குரு கூறினார்.
1.4 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நமது நாட்டை சிறப்பாக நிர்வகிக்க வேண்டுமென்றால், நமது தேசிய உணர்வும், நாட்டுப்பற்றும் வலுவாக இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் வளமாக தேசமாக மாறமுடியும். வளம் - செழிப்பு என்பது செல்வம் மட்டுமல்ல; நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் நல்வாழ்வையும் அது குறிக்கிறது என்று சத்குரு கூறினார்.
பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட ”அம்ரித் மஹோத்சவ்” என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்துள்ளார் சத்குரு.
நன்றியுணர்வு இல்லாத தேசம் வளராது. எனவே நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு மரியாதை செலுத்துவது முக்கியம் என்று சத்குரு தெரிவித்தார்.
இதையும் படிங்க - Independence day 2022 india: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடிக்கு ‘புல்லட் ப்ரூப்’ வழங்கப்படுகிறதா?
பெரிதாக புகழடையாத விடுதலை வீரர்களான ஜதிந்திரா தாஸ் முதல் ஜல்காரி பாய் வரை பலரது போராட்ட கதைகளை விளக்கும் வீடியோவையும் பதிவிட்டார்.
மேலும் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, 75வது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டின் பண்பாட்டு கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.