உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசின் உத்தரவை மீறி தேசிய கீதத்தை படாமல், ஒற்றுமை கீதமான ‘சாரே ஜஹான்ஸே அச்சா’ பாடலைப் பாடி பல்வேறு மதரசாக்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் சிறுபான்மையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறுபான்மையினர் உட்கொள்ளும் மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களில் கலாசாரங்களில் தலையிடுவது உள்ளிட்ட செயல்களில் ஆதித்யநாத் தலைமையிலான அரசு செய்து வருவதாக புகார்கள் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி கடந்த வாரம் உத்தரப்பிரதேச அரசு சார்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், மதரசாக்களில் சுதந்திர தினம் கொண்டாடப்படும் போது தேசிய கீதம் பாடப்பட வேண்டும். இதனை வீடியோவாக எடுத்து அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று கான்பூர், மீரட், பரேலி முதலிய மாவட்டங்களில் இருக்கும் மதரசாக்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, மாநில அரசின் உத்தரவை மீறி வீடியோக்கள் எடுக்கப்படவில்லை. மேலும் தேசிய கீதம் பாடப்படாமல் அதற்கு பதிலாக தேச ஒற்றுமையை வலியுறுத்தும் ‘சாரே ஜஹான்ஸே அச்சா’ பாடல் பாடப்பட்டது.

இதுகுறித்து சன்னி உலமா கவுன்சில் தலைவர் ஹாஜி முகமது சாலே கூறுகையில், பாரம்பரிய முறைப்படி மதரசா மாணவர்கள் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

எங்களின் நாட்டுப்பற்றை சோதிக்க வேண்டும் என்பதற்காக தவறான அணுகுமுறையை மாநில அரசு கையாளுகிறது என்றார். மாநிலத்தில் ஏறக்குறைய 16 ஆயிரம் மதரசாக்கள் உள்ளன. இவை அனைத்திலும், மாநில அரசு உத்தரவு பின்பற்றப்படவில்லை.

ஒரு சில இடங்களில் அரசின் உத்தரவை எதிர்த்து வெளிப்படையாக போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் சுதந்திர தின கொண்டாட்டம் ஜம்மு நகரில் உள்ள பக்‌ஷி மைதானத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்டது.

அப்போது, உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.எல்.ஏ.க்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் தேசிய கீதம் பாடப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஆனால் பொதுமக்களில் பெரும்பாலானோர் தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்கவில்லை.