டெல்லி நடைபெறும் சுதந்திர விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீரில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 8 வெடிகுண்டுகள் மற்றும் ரூ.60,000 பணத்துடன் காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு சென்ற ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் நடத்தி விசாரணையில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த இர்பான் ஹசன்வானி தீவிரவாதி என்பது தெரிவந்தது. ஆகஸ்ட் 15-ம் தேதி நடக்கும் சுதந்திர தின விழாவை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக பகீர் தகவலை கூறினார். ஜம்மு மற்றும் டெல்லியில் தாக்குதல் நடத்த காஷ்மீரில் செயல்பட்டு வரும் லக்ஷர் இ தொய்பா, ஜெய்சி-இ-முகம்மது, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது. 

தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே இர்பான் டெல்லி புறப்பட்டது தெரிய வந்துள்ளது. பயங்கரவாதி கைது செய்யப்பட்டதன் மூலம் பயங்கரவாத தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.