ரோபோட்டுகள், கணினிகள், இயந்திரங்கள் வருகையால் அடுத்த 15 ஆண்டுகளில் மனிதர்களுக்கு வேலை இருக்குமா என தெரியவில்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அச்சம் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் நிதித்துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கேரளா அரசு சார்பில்,
கொச்சியில் சர்வதேச டிஜிட்டல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரகுராம் ராஜன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்,  ரோபாட்களிலும், கணினிகளிலும் ஏற்பட்டுவரும் அதிநவீன மாற்றங்கள் எதிர்காலத்தில் மனிதர்களுக்குரிய வேலைவாய்ப்புகள் அனைத்தையும்
பறித்துக் கொள்ளலாம். அது பயிற்சி பெற்று செய்யும் வேலையாக இருந்தாலும் சரி அல்லது பயிற்சியின்றி செய்யும் வேலையாக இருந்தாலும் சரி ரோபாட்கள் ஆக்கிரமித்துக் கொள்ளப்போகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், என்னைப் பொறுத்தவரை அடுத்த 15 ஆண்டுகளில் மனிதர்களின் வேலைவாய்ப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகலாம் என்றும் அனைத்து வேலை
வாய்ப்புகளையும் கணினியும், ரோபாட்டுகளும் செய்யத் தொடங்கவிடும் என்றார். வேலைக்கு அதிகமான கற்பனைத் திறனும், மதிநுட்பமும் தேவைப்படும். அப்போது
இயற்கையாகவே மனிதர்களை வேலைக்கு வைப்பது குறைந்து கணினிக்கு மாறும்.

இந்தியாவைப் பொறுத்தவரை தொழிலநுட்பங்களைத் தேவைக்கு ஏற்றார்போல் பயன்படுத்தி, டிஜிட்டல் மாற்றத்தில் உலகளவில் சிறந்த நாடாகவே இருந்து வருகிறது.
மனிதர்களுக்குப் பதிலாக எந்திரங்கள் சில இடங்களில் ஆக்கிரமித்துக் கொண்ட போதிலும், பெரும்பாலான வேலை இழப்புகள் பறிபோய்விட்ட அச்சமின்றி செயல்பட்டு
வருகிறது.

எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் பெரிய அளவில் விரிவடையும், அப்போது, நம்மால் ரோபோட்களைப் பயன்படுத்துதையும், எந்திரங்களை அதிகமாக
பயன்படுத்துவதையும், கணினிகள் பயன்படுத்துவதையும் தவிர்க்க முடியாது என்று ரகுராம் ராஜன் பேசினார்.