கர்நாடகாவில் நடந்த கம்பாளா எருமை மாட்டுப் பந்தயத்தில் இளைஞர் ஒருவர் 100 மீட்டர் தொலைவை மின்னல் வேகத்தில் கடந்து தடகள வீரர் உசேன் போல்டின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, எருதுவிடுதல், ரேக்ளா ரேஸ் எப்படி பாரம்பரியமாக நடக்கிறதோ அதேபோல கர்நாடகா மாநிலத்தில் கம்பாளா எருமை மாட்டு பந்தயம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

இந்த பந்தயத்தில் எருமை மாடுகளை பூட்டி, சேற்றில் ஓடவிட்டு பந்தயம் நடத்தப்படும். ஒரே நேரத்தில் பல ஜோடி எருமை மாடுகளை உரிமையாளர்கள் ஓட்டுவதைக் காண மக்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

தென் கன்னடா மாவட்டத்தில் உள்ள மூடபித்ரி கிராமத்தில் நேற்று நடந்த கம்பாளா போட்டியில் 250 ஜோடி எருமை மாடுகள் பங்கேற்றன.

இதில் சீனிவாச கவுடா (28) என்பவர் 142.50 மீட்டர் தொலைவை வெறும் 13.62 வினாடிகளில் தனது எருமை மாடுகளால் கடந்தார். ஒலிம்பிக் ஓட்டப்பந்தய ஜமைக்கா வீரர் உசேன் போல்ட்டை விட ஸ்ரீநிவாச கவுடா வேகமாக ஓடியுள்ளார்.

அதாவது, 142.50 மீட்டரை 13.62 வினாடிகளில் ஸ்ரீநிவாச கவுடா கடந்திருக்கிறார் என்றால், 100 மீட்டரை அவர் 9.55 வினாடிகளில் கடந்திருக்கிறார். ஒலிம்பிக்கில் 100 மீட்டரை கடக்க ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட் 9.58 வினாடிகள் எடுத்துக் கொண்டார். அப்படி பார்க்கும் போது, அவரது சாதனையை ஸ்ரீநிவாசகவுடா முறியடித்துள்ளார். இதன் மூலம், கம்பாளா பந்தயத்தில் 30 ஆண்டுகளாக இருந்து வந்த சாதனையை அவர் முறியடித்ததாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.