In Tamil Nadu the Tamil diaspora in Tamil Nadu has been affected due to the survival of the kidneys.

தமிழ்நாட்டில் பிறந்து பிழைப்புக்காக கேரளாவில் குடியேறிய தமிழரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால், அவருடைய உயிரை காக்க அக்கிராம மக்கள் ரூ.11 லட்சம் நிதி திரட்டியுள்ளனர்.

மதுரையை சேர்ந்த ஜெயன்- மாரியம்மாள் தம்பதியினர் பிழைப்புக்காக கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சிங்காவனம் என்ற கிராமத்தில் குடியேறினர்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், ஜெயன் சலவைத் தொழில் செய்து வருகிறார். தன்னுடைய உழைப்பாலும், நேர்மையாலும் சிங்காவனம் மக்களை கவர்ந்த ஜெயன் அனைவரின் அன்பையும் பெற்றார்.

இந்நிலையில் சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த ஜெயனால், தொழிலை முன்னெடுத்து செய்ய முடியவில்லை.

கடந்த ஆறு மாதங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த ஜெயனுக்கு வாரத்துக்கு இருமுறை டயாலிசிஸ் பண்ண வேண்டிய சூழலும் இருந்தது.

எனவே ஜெயனுக்கு உதவி செய்ய எண்ணிய சிங்காவனம் கிராம மக்கள், நிதி திரட்ட முடிவு செய்தனர்.

ஜெயனின் உயிர் காக்கும் கமிட்டி என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கி, அதில் 5 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். கோவில்களில் ஜெயனுக்கு உதவி செய்யக்கோரி அறிவிப்பு வெளியானது.

உயிர் காக்கும் கமிட்டி உறுப்பினர்கள் கோட்டயம் மாநகராட்சி பகுதியில் கையில் வாளியுடன் சென்று வீடு, வீடாக நிதி திரட்டினார்கள்.

காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை நிதி திரட்டினர். 5 மணிநேரத்தில் ரூ.11 லட்சம் நிதி சேர்ந்தது, இப்பணம் ஜெயன் பெயரில் வங்கிக் கணக்கில் போடப்பட்டது.

அடுத்த மாதம் அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படவுள்ளது.