அருணாச்சலில் 600 புத்த துறவிகள் கலந்துகொண்ட மாநாடு! சீனாவின் அத்துமீறலுக்கு பதில்!
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நாள் தேசிய மாநாட்டில் சுமார் 600 பேர் கொண்ட புத்த மதத் தலைவர்கள் பங்கேற்றனர்.
அருணாச்சலப் பிரதேசத்தின் இந்திய சீன எல்லைப்புற கிராமத்தில் திங்கட்கிழமை புத்த மதத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வு அண்மையில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயரை மறுபெயரிட முயற்சித்த சீனாவுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புவதாக அமைந்துள்ளது.
சுமார் 600 பேர் கொண்ட புத்த மதத் தலைவர்கள் குழு திங்கள்கிழமை அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குச் சென்று ஒரு நாள் தேசிய மாநாட்டில் பங்கேற்றனர். நாளந்தா பௌத்த பாரம்பரியம் என்ற கருப்பொருளில் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ள ஜெமிதாங்கில் மாநாடு நடந்தது.
இமயமலைப் பகுதியில் உள்ள பௌத்தத் தலைவர்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஒன்றுகூடுவது ஓர் அரிய நிகழ்வு ஆகும். இதனால், திங்களன்று நடைபெற்ற மாநாடு, இந்தியப் பகுதிகளுக்கு மறுபெயரிடும் சீனாவின் முயற்சிக்கு எதிர்வினையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பௌத்த மதத் தலைவர்கள் இந்த மாநாடு இமயமலைப் பகுதியில் பௌத்த மதத்திற்கு வலுவான உந்துதலைக் கொடுக்கும் என்று தெரிவிக்கின்றனர். அருணாச்சலத்தில் உள்ள ஜெமிதாங் கிராமம், இந்திய - சீனா எல்லையில் உள்ள இந்தியாவின் கடைசி கிராமமாகும்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில், உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தியப் படைகளுடன் சீன துருப்புக்கள் மோதலில் ஈடுபட்டனர். இதுபற்றி, அறிக்கை வெளியிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன துருப்புக்கள் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தற்போது உள்ள நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்ற முயன்றதாகவும், அந்த முயற்சியை இந்தியப் படைகள் வெற்றிகரமாக முறியடித்ததாகவும் கூறினார்.
இந்த கூட்டத்தில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டுவும் கலந்துகொண்டார். "ஒவ்வொரு உயிரும் அமைதியான வாழவும் செழித்து வளரவும் பௌத்த கலாச்சாரம் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், பரப்பப்படவும் வேண்டும்" என முதல்வர் பெமா காண்டு கூறினார்.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பௌத்த மக்கள்தொகையில பெரிய அளவில் உள்ளது என்று கூறிய காண்டு, "புத்த மதத்தினர் தங்கள் மதம் மீதான பற்றினால் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாப்பாக முன்வந்துள்ளனர்" என்றும்கூறினார்.