மத்தியப்பிரதேச மாநிலம் மண்ட்சார் என்ற இடத்தில் ராஜீவ்காந்தி பட்டமேற்படிப்பு கல்லூரி உள்ளது. இங்கு தினேஷ் சந்திரகுப்தா என்ற பேராசிரியர் பணியாற்றி வருகிறார். இவரைத்தான், அகில பாரத வித்யார்த்தி பரிசத் (ஏபிவிபி) அமைப்பைச்சேர்ந்தவர்கள் மிரட்டி காலில் விழ வைத்துள்ளனர்.

ஏபிவிபி அமைப்பினர், கல்லூரிக்குள் ‘பாரத் மாதா கீ ஜே” என்று நீண்டநேரமாக கூச்சலில் ஈடுபட்டதாகவும், அதை பேராசிரியர் சந்திரகுப்தா கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஏபிவிபி மாணவர்கள் , சந்திரகுப்தாவிடம் தகராறு செய்துள்ளனர்.

மேலும், பேராசிரியரை ‘தேசத் துரோகி’ என்று குற்றம் சாட்டியதுடன் அவர் தங்களிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.இதனால் வேறு வழி தெரியாத பேராசிரியர், ஏபிவிபி மாணவர்களின்  காலைத் தொட்டு கும்பிட்டு மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைத் தளங்களில் பரவியதை யடுத்து, பேராசிரியர் மிரட்டப்பட்ட சம்பவம் வெளியுலகுக்கு தெரியவந்தது. சந்திரகுப்தா அவமரியாதை செய்யப்பட்டதை, சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதல்வர் ரவீந்திரகுமார் சோகானி வன்மையாக கண்டித்தார்.

பேராசிரியர் தினேஷ் சந்திரகுப்தா, தங்கள் கல்லூரியின் மூத்த பேராசிரியர் என்றும், 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் அவர், ஏற்கெனவே, இதய மற்றும் ரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்; அப்படிப்பட்டவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தி இருப்பது வேதனை அளிக்கிறது என்றும் ரவீந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே 3 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு வராத பேராசிரியர் சந்திரகுப்தா, தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “ஏபிவிபி போராளிகளை விட எனக்கு அதிக நாட்டுப்பற்று இருக்கிறது. தேசபக்தி முழக்கங்களை ஒருமுறை அல்ல, ஆயிரம் முறை முழக்கமிடுவேன்; ஆனால் அவர்களைப் போல அல்ல” என்று அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு உஜ்ஜைனி கல்லூரி பேராசிரியரான சபர்வால் என்பவரை, ஏபிவிபி-யினர் கடுமையாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். எனினும், நாக்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.