4 உயிர்களைக் காப்பாற்றிய பச்சிளம் குழந்தை! குஜராத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!
குழந்தையின் பெற்றோரின் தன்னலமற்ற செயல் பல உயிர்களுக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ளது என்று உறுப்புதான அறக்கட்டளையின் அறங்காவலர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
குஜராத்தில் பிறந்து வெறும் 100 மணிநேரமே ஆன ஆண் குழந்தை மூளைச்சாவு அடைந்ததை அடுத்து, உடல் உறுப்பு தானம் மூலம் வேறு நான்கு குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அனுப் தாக்கூர் மற்றும் வந்தனா தாக்கூர் இருவருக்கும் தங்களுக்குப் பிறந்த குழந்தை இறந்து பிறந்ததால், இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அக்டோபர் 23ஆம் தேதி சுமார் 7.50 மணியளவில் பிறந்த குழந்தை மூளைச் சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோரின் ஒப்புதலுடன் குழந்தையின் சிறுநீரகங்கள், கருவிழிகள், மண்ணீரல் உள்ளிட்ட உறுப்புகள் வெள்ளிக்கிழமை இரவு அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பபட்டன.
அனுப் தாக்கூர் தனது மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்தபோது, குழந்தைக்கு இதயத் துடிப்பு 15% மட்டுமே இருந்தது. சீராக சுவாசிக்க முடியவில்லை. இதனால், குழந்தையைக் காப்பாற்ற உடனே அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். சிசேரியன் மூலம் பிறந்த குழந்தையின் உடலில் எந்த அசைவும் இல்லை. அழவும் இல்லை.
48 மணிநேர கண்காணிப்புக்குப் பிறகு, குழந்தை மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என அனூப் தாக்கூர் சொல்கிறார். சமீபத்தில் குழந்தைகள் உடல் உறுப்பு தானம் தொடர்பாக அறிந்திருந்த அனுப் மற்றும் வந்தனா இருவரும் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தனர்.
குழந்தை இறந்தே பிறந்த துயரச் சூழலிலும் அதை மீறி அவர்கள் செய்திருக்கும் தன்னலமற்ற கருணை செயல் பல உயிர்களுக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ளது என்று ஜீவன்தீப் உறுப்புதான அறக்கட்டளையின் அறங்காவலர் விபுல் தளவியா நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.