நள்ளிரவில் தடம் புரண்ட ரயில்.. அலறிய ரயில் பயணிகள்.. ராஜஸ்தானின் அஜ்மீரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ராஜஸ்தானின் அஜ்மீரில் 4 பெட்டிகள், அதிவிரைவு ரயிலின் இன்ஜின் தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள மதார் ரயில் நிலையம் அருகே அதிவிரைவு ரயிலின் நான்கு பெட்டிகள் மற்றும் இன்ஜின் தடம் புரண்டது. இந்த சம்பவம் நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, “மதார் ரயில் நிலையம் அருகே சபர்மதி-ஆக்ரா அதிவிரைவு ரயிலின் இன்ஜினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. விரைவில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை.
இச்சம்பவம் நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றதாக பயணிகள் தெரிவித்தனர். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென பலத்த சத்தம் கேட்டதாக பயணிகள் தெரிவித்தனர். ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்), அரசு ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) மற்றும் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் (ஏடிஆர்எம்) மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன.
தடம் புரண்ட பெட்டிகள் மற்றும் இன்ஜினை மீண்டும் பாதையில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. வடமேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO), கேப்டன் சஷி கிரண் கூறுகையில், இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
எங்கள் குழு விரைவில் தளத்தை மீட்டெடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திலேயே மறுசீரமைப்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர். நாங்கள் 0145-2429642 என்ற உதவி எண்ணையும் அமைத்துள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.
இவிஎம் மெஷின் எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? முடியாதா? ஓர் அலசல்!