மத்தியப் பிரதேசத்தின் பன்னா புலிகள் காப்பகத்தில் 'அனார்கலி' என்ற 57 வயது யானை, இரட்டை பெண் குட்டிகளை ஈன்றுள்ளது. வனவிலங்கு உலகில் மிகவும் அரிதான இந்த நிகழ்வு, காப்பக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் (Panna Tiger Reserve - PTR) 'அனார்கலி' என்ற 57 வயது யானை, இரட்டை பெண் குட்டிகளை ஈன்றுள்ளது. இது வனவிலங்கு உலகில் மிக அரிதாக நிகழும் அதிசயம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த சனிக்கிழமையன்று, கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனவிலங்கு நிபுணர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த பிரசவம் நடைபெற்றது. சுமார் மூன்று மணி நேர இடைவெளியில் இரண்டு குட்டிகளும் பிறந்தன. தாயும், புதிதாகப் பிறந்த இரண்டு குட்டிகளும் பூரண நலத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வனவிலங்கு மருத்துவர் டாக்டர் சஞ்சீவ் குமார் குப்தா கூறுகையில், "பாதுகாக்கப்பட்ட சூழலில் கூட யானைகளுக்கு இரட்டைக் குட்டிகள் பிறப்பது மிகவும் அரிதான ஒன்று. இது இயற்கையின் ஒரு அதிசயம்," என்று மகிழ்ச்சி தெரிவித்தார். பன்னா புலிகள் காப்பக வரலாற்றிலேயே ஒரு யானை இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுப்பது இதுவே முதல் முறையாகும்.
அனார்கலிக்கு சிறப்பு கவனிப்பு
இந்த இரட்டைக் குட்டிகளின் வருகையால் காப்பகத்தில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதை உறுதி செய்ய தனி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
காப்பகத்தின் கள இயக்குனர் நரேஷ் சிங் யாதவ் கூறுகையில், "அனார்கலிக்குச் சிறப்புக் கவனிப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவருக்குச் சத்தான கஞ்சி, கரும்பு, வெல்லம் மற்றும் சுத்தமான நெய்யில் செய்யப்பட்ட லட்டுகள் உணவாக வழங்கப்படுகின்றன," என்று தெரிவித்தார்.
யார் இந்த அனார்கலி?
அனார்கலி சாதாரண யானை அல்ல; பன்னா காப்பகத்தின் முதுகெலும்பாகத் திகழ்பவர்.
1986-ம் ஆண்டு இக்காப்பகத்திற்கு கொண்டுவரப்பட்ட அனார்கலி, வனப் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகிறார். இதுவரை 6 குட்டிகளை ஈன்றுள்ள இவருக்கு, இரட்டையர்கள் பிறப்பது இதுவே முதல் முறை.
ரோந்து பணியின் போது கடத்தல்காரர்களோ அல்லது சட்டவிரோத மரம் வெட்டுபவர்களோ தென்பட்டால், தனது தும்பிக்கையால் கற்களை வீசி அவர்களை விரட்டும் அளவுக்குக் கூர்மையான உள்ளுணர்வு கொண்டவர்.
மழைக்காலங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ரோந்து செல்லவும், புலிகளைக் கண்காணிக்கவும், மீட்புப் பணிகளுக்கும் அனார்கலி போன்ற யானைகளே பெரிதும் உதவுகின்றன.
பன்னா காப்பகத்தின் சிறப்பு
விந்திய மலைத்தொடரில் அமைந்துள்ள பன்னா புலிகள் காப்பகம், இந்தியாவின் 22-வது புலிகள் காப்பகமாகும். புலிகள் மறுவாழ்வுத் திட்டம், முதலைகள் மறுவாழ்வு மற்றும் கழுகுகள் பாதுகாப்பு ஆகியவற்றிற்குப் பெயர் பெற்ற இக்காப்பகத்திற்கு, இந்த இரட்டை யானைக் குட்டிகளின் வருகை மேலும் ஒரு சிறப்பாக மாறியுள்ளது.


