ஆதார் எண் இணைக்கவில்லை என்றால் பான் கார்டு ரத்து… ஆகஸ்ட் 31 கடைசி நாள்…இறுதி வாய்ப்பும் இது தான்…

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

வருமான வரித்துறை சார்பில் நாட்டில் உள்ள அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது.

 வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டை பெறலாம். இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

அதற்கான காலக்கெடு ஜூன் 30-ம் தேதி என நிர்ணயித்தது. ஆனால், அந்த காலக்கெடுவுக்குள் பான் எண்-ஆதார் எண் இணைப்பு முழுமை பெறவில்லை.ஆதார் எண் கிடைக்காதவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதேசமயம் நேரடி வரிவிதிப்பு கழகமும் காலக்கெடுவை நீட்டித்தது.

ஆதார் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஜூன் 30-க்குப் பிறகும் செல்லுபடியாகும் என்றும் ஆதார்-பான் கார்டு இணைப்புக்கான கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் வருமான வரி தாக்கலுக்கான கெடு ஆகஸ்டு 5-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக நிதித்துறை அமைச்சகம் தனது  டுவிட்டர் செய்தியில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.