இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தி அசத்தியுள்ளனர். பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானம் வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவத்தின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் அதிரடியாக வேட்டையாடியது. இதில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் காஷ்மீர் வான் எல்லைப் பகுதிக்குள் இன்று காலை நுழைய முயன்ற பாகிஸ்தானின் 2 எஃப்16 ரக போர் விமானங்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர். இதனையடுத்து இந்திய விமானப்படை தளங்களில் உச்ச கட்ட உஷார் நிலை அமல்படுத்தப்பட்டது. மேலும் ஜம்மு, ஸ்ரீநகர், பதன்கோட் விமான நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் வந்து செல்லக் கூடிய விமான சேவைகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 

இதற்கிடையே, எல்லை தாண்டி ரஜோரி செக்டாரில் ஊடுருவிய பாகிஸ்தான் விமானங்கள், சிறிய ரக குண்டுகளை வீசியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நவ்ஷேரா எல்லைக்கு அப்பால் லாம் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளனர். பாகிஸ்தான் போர் விமானத்தில் இருந்து விமானி பாராசூட்டில் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.