நடிகை ஸ்ரீதேவி கடைசியாக நடித்த மாம் படத்தில் மகளாக நடித்த பாகிஸ்தான் நடிகை சாஜல் அலி, நான் எனது தாயை மீண்டும் இழந்து விட்டேன் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

துபாயில் உறவினர் திருமணத்துக்கு சென்ற ஸ்ரீதேவி, மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மரண செய்தியைக் கேட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஸ்ரீதேவி கடைசியாக நடித்த படம் மாம் என்கிற இந்தி படமாகும்., இந்த படத்தில் ஸ்ரீதேவிக்கு மகளாக நடித்தவர் சாஜல் அலி. இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். நடிகை ஸ்ரீதேவி மறைவு செய்திய கேட்ட அவர், எனது தாயை மீண்டும் இழந்து விட்டேன் என்று வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நிஜ வாழ்வில் தாயை இழந்த சாஜல் அலிக்கு, ஸ்ரீதேவி ஒரு தாயைப்போல அன்பு செலுத்தி உள்ளார். இதனால் சாஜல், ஸ்ரீதேவியுடன் மிகவும் நெருக்கமாக ஒரு மகளைப் போல இருந்துள்ளார்.

ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்த செய்தியைக் கேட்ட சாஜல் அலி, மிகவும் வேதனை அடைந்துள்ளார். தானும் ஸ்ரீதேவியும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், நான் என் தாயை மீண்டும் இழந்துள்ளேன் என துக்கத்துடன் பகிர்ந்துள்ளார். 

மாம் திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் கணவராக நடித்த அட்னான் சித்திக்கி பாகிஸ்தானை சேர்ந்தவராவா. இவரும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். நான் அவருடன் மாம் படத்தில் நடித்தது எனக்கு பெருமையாகும். அவர் இப்போது நம்முடன் இல்லை என்பது எனக்கு பெரிதும் துக்கத்தை அளிக்கிறது. அவருடைய பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் அவரை இழந்து தவிக்கின்றனர். அவருடைய இழப்பை தாங்கும் வலிமையை இறைவன் அவரது குடும்பத்துக்கு அளிக்க வேண்டும் என்று அட்னான் சித்திக்கி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.