பெங்களூருவில் மனைவியைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட மருத்துவர், பல பெண்களுக்கு "உனக்காகத்தான் என் மனைவியைக் கொன்றேன்" என போன்பே மூலம் மெசேஜ் அனுப்பியது அம்பலமாகியுள்ளது.

தன்னுடைய மனைவியைக் கொலை செய்ததாகக் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட பெங்களூரு மருத்துவர் மகேந்திர ரெட்டி குற்றம் நடந்த சில வாரங்களுக்குப் பிறகு, பல பெண்களுக்கு அனுப்பிய அதிர்ச்சியூட்டும் செய்தியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அவர் பணம் செலுத்தும் செயலியான 'போன்பே' (PhonePe) மூலம் குறைந்தது நான்கு அல்லது ஐந்து பெண்களுக்கு "நான் உனக்காகத்தான் என் மனைவியைக் கொன்றேன்" என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.

போன்பே மூலம் தகவல்தொடர்பு

குற்றவாளியின் கைப்பற்றப்பட்ட தொலைபேசி மற்றும் லேப்டாப்பில் இருந்து தரவுகளைப் பிரித்தெடுத்த பின்னரே இந்தச் செய்திகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பின்னர், இந்தத் தரவுகள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு (FSL) அனுப்பப்பட்டன.

மகேந்திரா தனது தகவல்களை அனுப்ப, 'போன்பே' செயலியைப் பயன்படுத்தியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் செய்தியைப் பெற்றவர்களில், முன்பு இவரின் காதலை நிராகரித்த ஒரு மருத்துவ நிபுணரும் அடங்குவார். மனைவியின் மரணத்திற்குப் பிறகு, தனது பழைய உறவுகளை மீண்டும் புதுப்பிக்க அவர் தீவிரமாக முயன்றதாகத் தெரிகிறது.

சிகிச்சையாகக் காட்டப்பட்ட கொலை

டாக்டர் மகேந்திர ரெட்டி, தனது மனைவி டாக்டர் கிருத்திகா எம். ரெட்டியை அறுவை சிகிச்சை அரங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் புரோபோஃபோல் (Propofol) என்ற மயக்க மருந்தைச் செலுத்தி கொலை செய்ததாகக் கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்டார். கிருத்திகா தோல் மருத்துவ நிபுணராகப் பணிபுரிந்தவர்.

இருவரும் விக்டோரியா மருத்துவமனையில் பணிபுரிந்த நிலையில், மே 26, 2024 அன்று திருமணம் செய்தனர். திருமணமாகி ஒரு வருடத்திற்குள், ஏப்ரல் 23, 2025 அன்று, உடல்நலக்குறைவு காரணமாக மரத்தஹள்ளியில் உள்ள தன் தந்தை வீட்டில் தங்கியிருந்த கிருத்திகா மயங்கி விழுந்தார்.

சிகிச்சை என்ற பெயரில், மகேந்திரா இரண்டு நாட்களாக வந்து அவருக்குச் ஊசிகள் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

அம்பலமான உண்மை

ஆரம்பத்தில், இது இயற்கையான மரணம் என்று கருதப்பட்டதால், காவல்துறையினர் அசாதாரண மரணம் எனப் பதிவு செய்தனர். ஆனால், கிருத்திகாவின் சகோதரி டாக்டர் நிகிதா எம். ரெட்டி சந்தேகம் தெரிவித்து விரிவான விசாரணைக்குக் கோரினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு வந்த தடயவியல் ஆய்வக அறிக்கை, கிருத்திகாவின் பல உறுப்புகளில் மயக்க மருந்தான புரோபோஃபோல் இருப்பது உறுதி செய்தது. இது கிருத்திகாவிற்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியது.

இதையடுத்து, வழக்கு இந்திய நியாய சன்ஹிதா (BNS) 2023-இன் பிரிவு 103-இன் கீழ் கொலையாக மறுவகைப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு உடுப்பியில் உள்ள மணிப்பாலுக்கு இடமாற்றம் செய்திருந்த மகேந்திரா, அங்கிருந்து கைது செய்யப்பட்டார்.

குற்றப் பின்னணி

மகேந்திராவின் குடும்பத்திற்குப் பின்னணியில் குற்ற வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மகேந்திராவின் இரட்டை சகோதரர் டாக்டர் நாகேந்திர ரெட்டி ஜி.எஸ். மீது 2018-இல் பல மோசடி மற்றும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. மகேந்திராவும், மற்றொரு சகோதரர் ராகவா ரெட்டி ஜி.எஸ்.-ம் 2023-இல் அச்சுறுத்தல் வழக்கில் இணை குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திருமணத்தின் போது இந்த விவரங்கள் மறைக்கப்பட்டதாகக் கிருத்திகாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.