மணிப்பூரில் மற்றொரு கொடுமை! தீ வைக்கப்பட்ட வீடு... தப்பி ஓடிய பெண்ணை இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம்!

கீழே விழுந்த தன்னை ஐந்து-ஆறு பேர் பிடித்து எழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர் என புகார் அளித்துள்ள பெண் கூறியுள்ளார்.

I Fell, Sister-In-Law Ran With My Sons: Another Manipur Gang-Rape Horror

மே மாத தொடக்கத்தில் மணிப்பூரில் தொடங்கிய கலவரத்தில் நடந்த மற்றொரு கொடூரமான பாலியல் வன்கொடுமை வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் வசிக்கும் பெண் காவல்துறையில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

மணிப்பூரில் அதிகமான பெண்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளையும், காட்டுமிராண்டித்தனத்தையும் காவல்துறை அணுகி புகாராக பதிவு செய்து வருகிறார்கள். சமீபத்திய வழக்கில், மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளார்.

மே 3ஆம் தேதி கலவரத்தில் தீ வைக்கப்பட்ட வீட்டில் இருந்து தனது இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் மைத்துனருடன் தப்பிச் செல்லும் போது, ஒரு குழுவினர் தன்னைப் பிடித்து இழுத்துச் சென்றனர் என்று அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.  இழுத்துச் சென்ற கும்பல் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பல பெண்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி பேசிய செய்திகள் வெளிவந்துகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, தானும் காவல்துறையிடம் செல்ல தைரியம் வந்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

"என் குடும்பத்தின் கவுரவம் கண்ணியம் போய்விடுமோ என்றும் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாக நேரிடுமோ என்று அஞ்சியும் என்னை காப்பாற்றிக் கொள்ள நினைத்து இந்தச் சம்பவத்தை நான் வெளியிடவில்லை. சமூகத்தின் இந்த இழிவான நிலை காரணமாக இந்தப் புகாரை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. நான் தற்கொலை செய்துகொள்வதற்குக் கூட நினைத்தேன்" என்று அந்த பெண் சொல்கிறார்.

புதன்கிழமை பிஷ்ணுபூர் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட 'ஜீரோ எஃப்ஐஆர்' உடன் அவரது அறிக்கை இணைக்கப்பட்டது. புகார் அளித்த பெண் இப்போது நிவாரண முகாமில் வசித்து வருகிறார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376D, 354, 120B மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையின்படி, மே 3 அன்று மாலை 6.30 மணியளவில், அந்த பெண்ணின் வீட்டையும் அதற்குப் பக்கத்து வீட்டையும் மர்ம நபர்கள் எரிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், உயிர் பிழைக்க இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் மைத்துனர் ஆகியோருடன் ஓடியிருக்கிறார்.

"நான் என் மருமகளை என் முதுகில் தூக்கிக்கொண்டு என் இரண்டு மகன்களையும் பிடித்துக்கொண்டு என் அண்ணியுடன் அந்த இடத்திலிருந்து ஓட ஆரம்பித்தேன். அவளும் ஒரு குழந்தையை முதுகில் சுமந்துகொண்டு எனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தாள். அப்போது நான் தடுமாறி கீழே விழுந்தேன். உடனே எழுந்திருக்க முடியவில்லை" என்று பாதிக்கப்பட்ட பெண் புகாரில் விவரிக்கிறார்.

"ஒரு வழியாக நான் எழுந்திருக்கும்போது ஐந்து-ஆறு பேர் என்னைப் பிடித்துக்கொண்டனர். என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டித் தாக்கத் தொடங்கினர். என் எதிர்ப்பையும் மீறி, வலுக்கட்டாயமாக என்னைக் கட்டி இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்" என்று அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios