எனது பெயரில் எனக்கு வீடு இல்லை; நாட்டில் எனது மகள்களின் பெயரில் வீடு கொடுப்பதற்கு உழைக்கிறேன்; பிரதமர் மோடி!!
''எனது பெயரில் எனக்கு வீடு இல்லை. ஆனால், நாட்டின் மகள்களுக்கு அவர்களது பெயரில் வீடு கொடுப்பதற்கு நான் கடினமாக உழைத்து வருகிறேன்'' என்று அகமதாபாத்தில் இன்று நடந்த வைபிரன்ட் குஜராத் மாநாடு 2023ல் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியாவை உலகளாவிய வளர்ச்சி நாடாக மாற்றுவதே தனது நோக்கம் என்றும், நாடு விரைவில் உலகின் பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் என்றும் வைபிரன்ட் குஜராத் மாநாடு 2023ல் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
வைபிரன்ட் குஜராத் உச்சிமாநாட்டின் 20 ஆம் ஆண்டு வெற்றியைக் குறிக்கும் நிகழ்வு குஜராத்தில் இன்று நடந்தது. இதில் பங்கேற்று பிரதமர் மோடி இன்று பேசுகையில், '' 20 ஆண்டுகளுக்கு முன்பு "வைபிரன்ட் குஜராத்" என்ற சிறிய விதையை விதைத்தோம், இன்று அது பெரிய மரமாக வளர்ந்துள்ளது. முந்தைய மத்திய அரசு (யுபிஏ ஆட்சி) மாநிலத்தின் தொழில்துறை முன்னேற்றத்தில் "அலட்சியமாக" இருந்த நேரத்தில், வைபிரன்ட் குஜராத் வெற்றி பெற்றது.
“குஜராத்தை இந்தியாவின் வளர்ச்சி இயந்திரமாக மாற்ற இந்தப் பெயரை வைத்து இருந்தோம். 2014ல், நாட்டிற்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு அளித்தபோது, இந்தியாவை உலகளாவிய வளர்ச்சி இயந்திரமாக மாற்றுவதே எனது நோக்கமாக இருந்தது.
விரைவில் இந்தியா உலகப் பொருளாதார மையமாக உருவெடுக்கும். நாம் அதற்கான புள்ளியில்தான் தற்போது இருக்கிறோம். உலக ஏஜென்சிகள் மற்றும் வல்லுனர்கள் என அனைவரும் இதைத்தான் தற்போது பேசி வருகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். இது மோடியான என்னுடைய உத்தரவாதம். நாட்டில் எந்தெந்த துறையை வலுப்படுத்த முடியும், துறைகளை வளர்க்க முடியும் என்பதை தொழில் நிறுவனங்கள் கண்டறிய வேண்டும். இதற்கு வைபிரன்ட் குஜராத் அனைத்து உதவிகளையும் செய்யும்.
சுவாமி விவேகானந்தர் ஒன்றை கூறுவார். எந்த வேலையை துவங்கினாலும் அது மூன்று கட்டங்களை கடந்து செல்ல வேண்டும். அதாவது, எள்ளி நகையாடுவது, எதிர்ப்பது, பின்னர் அதை ஏற்றுக் கொள்வது என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தான் வைபிரன்ட் குஜராத் திட்டமும் கடந்து சென்று இன்று வெற்றியை பெற்றுள்ளது. இதை துவக்கியபோது, மத்திய அரசு குஜராத் அரசிடம் பாரபட்சமாக நடந்து கொண்டது. நான் எப்போதும் நாட்டின் வளர்ச்சியை குஜராத் வளர்ச்சியுடன் இணைத்துப் பேசி வந்துள்ளேன். ஆனால், மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் குஜராத்தின் வளர்ச்சியை அரசியலுடன் தொடர்புபடுத்தினர்.
இனி வங்கியில் 50,000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தொடர்ந்து குஜராத் மாநிலம் புறக்கணிக்கப்பட்டு வந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிரட்டப்பட்டு வந்தனர். அப்போதைய மத்திய அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும், இந்த தடைகளை மீறி, சிறப்பு சலுகைகள் எதுவும் இல்லாமல் குஜராத்தில் வெளிநாட்டு முதலீடுகள் குவிந்தது. மாநிலத்தில் நல்ல அரசு, பாரபட்சமற்ற அரசு, கொள்கை அடிப்படையில் செயல்படும் அரசு, ஒரே மாதிரியான வளர்ச்சியைக் கொண்ட அரசு, வெளிப்படைத்தன்மை கொண்ட அரசு இருந்ததுதான் இதற்குக் காரணம்'' என்றார்.