டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 கார், ஓ.எல்.எக்ஸ் மூலம் வாங்கப்பட்டு பலமுறை கைமாறியுள்ளது. இந்த கார் ஐந்து பேரிடம் கைமாறிய போதிலும், ஒரே பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) கார் குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த மருத்துவர் உமர் முகமது என்பவரால் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவர், ஹரியானாவைச் சேர்ந்த கார் டீலர் ஒருவரிடமிருந்து சுமார் ரூ. 1.70 லட்சத்துக்கு காரை வாங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் மின் மேம்பாட்டுத் துறையில் புல்வாமாவில் பணியாற்றி வந்த ஆமிர் ரஷீத் என்பவர், உமர் முகமதுவுக்கு இந்த கார் வாங்க உதவி செய்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஆமிர் தான் இந்த காரை டீலரிடமிருந்து பெற்று முகமதுவிடம் ஒப்படைத்துள்ளார்.

ஓ.எல்.எக்ஸ் மூலம் வாங்கிய கார்

ஆமிர் ரஷீத், ஹரியானாவைச் சேர்ந்த டீலர் சோனு என்பவரிடம் இருந்து, அக்டோபர் 29ஆம் தேதி 'ஓ.எல்.எக்ஸ்' (OLX) இணையதளம் மூலம் இந்தக் காரை வாங்கியுள்ளார்.

இதற்காக டீலருக்கு ரூ. 10,000 கமிஷன் வழங்கப்பட்டுள்ளது. கார் வெடிப்பதற்கு ஒரு மாத கால அவகாசத்திற்குள் பதிவுச் சான்றிதழை (RC) மாற்றித் தருவதாக டீலர் சோனு உறுதியளித்துள்ளார்.

வாகனப் பதிவு மாற்று நடைமுறைக்கு 20 முதல் 25 நாட்கள் ஆகும் என்பதால், அதிலிருந்து தப்பிக்கவே கமிஷன் வழங்கப்பட்டுள்ளது.

ஆமிர், வாகனத்தை வாங்கும்போது புல்வாமாவைச் சேர்ந்த முகவரியைக் கொடுத்துள்ளார். பின்னர் இந்தக் காரை உமர் முகமதுவிடம் ஒப்படைக்க, அவர் அதைக் கொண்டு வந்து தலைநகரில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிறுத்திய சிறிது நேரத்தில் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர்.

5 பேருக்கு கைமாறிய கார் - ஒரே பெயரில் பதிவு!

HR26CE7674 என்ற பதிவு எண் கொண்ட இந்தக் கார் 2013ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. முதல் உரிமையாளர் நதீம் என்பவர் 2014 மார்ச் 18 அன்று குருகிராம் ஷோரூமில் வாங்கினார். பின்னர் அதே ஆண்டில், குருகிராமைச் சேர்ந்த சல்மான் என்பவருக்கு விற்கப்பட்டு, அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவுச் சான்றிதழின் படி சல்மானே இரண்டாம் உரிமையாளர்.

குண்டுவெடிப்புக்குப் பிறகு சல்மானை காவல்துறை தொடர்பு கொண்டபோது, அவர் ஓக்லாவைச் சேர்ந்த தேவேந்திரா என்பவருக்கு காரை விற்றதாகக் கூறியுள்ளார்.

தேவேந்திரா ஃபரிதாபாத்தைச் சேர்ந்த அமித் படேல் என்பவருக்கு விற்றதாகவும், அவர் இறுதியாக அக்டோபர் 29 அன்று ஆமிர் ரஷீத்துக்கு விற்றதாகவும் தெரிய வந்துள்ளது. ஆமிரிடமிருந்து ஃபரிதாபாத் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த மருத்துவர் முகமது வசம் கார் சென்றுள்ளது.

ஆபத்தான விஷயம் என்னவென்றால், இத்தனை பேர் கைமாறியும், வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்றும், இந்தக் கார் இன்னும் சல்மான் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆவணங்கள் இல்லா வாகனங்கள்

ஆவணச் செலவுகளைத் தவிர்க்க, பழைய கார் சந்தையில் வாகனங்களை மறு பதிவு செய்யாமல் வாங்குவதும் விற்பதும் சாதாரணமாக நடக்கும் நடைமுறை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தங்களைக் கண்டறிய முடியாதவாறு ஆவணங்கள் இல்லாத வாகனங்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.

இதனால், வாகனத்தை வைத்து ஏதேனும் ஒரு குற்றம் நடந்தால், விசாரணையாளர்கள் ஆவணங்களில் உள்ள அசல் உரிமையாளரிடமே சென்று நிற்பதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.