வீடியோவைப் பார்த்த சமூக வலைத்தள பயனர்கள் பலர் ஜோமேட்டோ நிறுவனத்தையும் அலட்சிமாக உணவு தயாரித்து வழங்கும் பவார்ச்சி உணவகத்தையும் கண்டனம் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.

தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஒருவர் ஜோமேட்டோ மூலம் பவார்ச்சி என்ற உள்ளூர் உணவகத்தில் ஆர்டர் செய்த பிரியாணியில் பல்லி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பர்பேட்டை பகுதியில் வசிக்கும் விஷ்வா ஆதித்யா என்பவர் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு இது குறித்து புகார் கூறியுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் அந்த பிரியாணியைச் சாப்பிடுவதாக இருந்தபோது, நல்ல வேளையாக அதில் செத்த பல்லி கிடப்பதைப் பார்த்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விஷ்வாவின் குடும்ப உறுப்பினர்கள் பல்லி விழுந்த பிரியாணி தட்டைக் காட்டுகின்றனர். வீடியோவைப் பார்த்த சமூக வலைத்தள பயனர்கள் பலர் ஜோமேட்டோ நிறுவனத்தையும் அலட்சிமாக உணவு தயாரித்து வழங்கும் பவார்ச்சி உணவகத்தையும் கண்டனம் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.

Scroll to load tweet…

ஒரு பயனர் இந்த பிரியாணியை "நீங்கள் சாப்பிட்டீர்களா?" என்று கேட்டிருக்கிறார். மற்றொரு நபர் "பிரபலமான உணவகங்கள் தரத்தைப்பற்றிக் கவலைப்படுவது இல்லை" என்று கருத்து தெரிவித்துள்ளார். சில பயனர்கள் GIFகள் மற்றும் மீம்ஸ்களை வெளியிட்டு அதிர்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். சிலர் உணவகத்திற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

வைரலான இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த ஜோமேட்டோ நிறுவனம், "நாங்கள் இந்த வாடிக்கையாளரிடம் பேசினோம். இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.

பவார்ச்சி உணவகத்தின் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு வருவது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு மே மாதம், பவார்ச்சி உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணியில் பல்லி இருப்பதாகக் கூறி பாஜக பிரமுகர் ஒருவர் புகார் கூறினார். அவரது புகாரின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் உணவகத்தில் சோதனை நடத்தினர்.