தெலங்கானாவில் திருமணமான ஒரு மாதத்தில் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் கள்ளக்காதல் விவகாரமே கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவி மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜேஷ்வர்(32). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கும் ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவருக்கும் மே 18ம் தேதி இரு வீட்டார் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மறுநாளே ஐஸ்வர்யா தேஜேஷ்வரை அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு
மேலும் ஐஸ்வர்யா அடிக்கடி செல்போனில் யாரிடமோ ரகசியமாக பேசி வந்துள்ளார். இதுதொடர்பான மனைவியை தேஜேஷ்வர் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 17ம் தேதியில் இருந்து தேஜேஷ்வர் வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேஜேஷ்வரின் சகோதரர் கட்வால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மனைவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை
இந்நிலையில், நேற்று முன்தினம் பன்யம் அருகே உள்ள சுகலிமெட்டா என்ற இடத்தில் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது போலீசார் விசாரணையில் தேஜேஷ்வர் உடல் என்பது உறுதியானது. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தேஜேஷ்வர் மனைவியிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து ஐஸ்வர்யா, அவரது தாயார் சுஜாதா ஆகியோரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
கூலிப்படை ஏவி கணவர் கொலை
ஐஸ்வர்யாவின் தாய் சுஜாதா கர்னூலில் உள்ள ஒரு வங்கியில் தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். அதே வங்கியில் பணிபுரியும் ஊழியருடன் சுஜாதாவிற்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அந்த ஊழியருடன் ஐஸ்வர்யாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. திருமணத்திற்கு பின்பும் ஐஸ்வர்யா, வங்கி ஊழியருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதை தேஜேஷ்வர் கண்டித்ததால் அவரை கொலை செய்ய ஐஸ்வர்யா, வங்கி ஊழியருடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். அதன்படி வங்கி ஊழியர், கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து தேஜேஷ்வரை கொலை செய்தது தெரியவந்தது.
வங்கி ஊழியருடன் 2000 முறை போனில் பேச்சு
திருமணமான ஒரு மாதத்தில் மட்டும் ஜஸ்வர்யா வங்கி ஊழியருடன் 2000 முறை போனில் பேசியுள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், ஐஸ்வர்யா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தாயாரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக வங்கி ஊழியர் மற்றும் கூலிப்படையினரையும் தேடி வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் மனைவி கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
