சீன நிதியுதவியுடன் இயங்குவதாக குற்றம்சாட்டப்பட்ட நியூஸ்கிளிக் இணையத்திற்கு பிரபலங்கள் ஆதரவு கையெழுத்து!!
நியூஸ்க்ளிக் ஆன்லைன் செய்தி இணையதளத்தை ஆதரித்து 700க்கும் மேற்பட்ட மூத்த பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
நியூஸ்கிளிக் என்பது ஒரு ஆன்லைன் செய்தி இணையதளம். இந்த இணையதளம் சீனாவின் நிதியுதவியுடன் இயங்கி வருவதாகவும், இதற்கு நெவில் ராய் சிங்கம் என்ற அமெரிக்க தொழிலதிபர் பின்னணியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இவரது மின்னஞ்சல் (Email) வாயிலாக பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் சிபிஐ(எம்) தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட அவரது குழுவினருக்கு சீன பிரச்சாரத்தை ஊக்குவிக்குமாறு தகவல்கள் பரிமாறப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இதுதொடர்பாக தற்போது வெளியாகி இருக்கும் அறிக்கையில், ''ஜான் தயாள், என். ராம், பிரேம் ஷங்கர் ஜா, சித்தார்த் வரதராஜன், எம்.கே. வேணு (நிறுவன ஆசிரியர்கள், தி வயர்), சுதீந்திர குல்கர்னி, பி. சாய்நாத், வைஷ்னா ராய் (எடிட்டர், ஃப்ரண்ட்லைன்), பெஸ்வாடா வில்சன் (தேசிய கன்வீனர், சஃபய் கரம்சாரி அந்தோலன்), அருணா ராய் (மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன்), பிரசாந்த் பூஷன், ஹர்ஷ் மந்தர், `சைதா ஹமீத், சஞ்சய் ஹெக்டே, நீதிபதி கே. சந்துரு, கொலின் கோன்சால்வ்ஸ், கே. சச்சிதானந்தன், ஜெர்ரி பின்டோ, தாமோதர் மௌசோ (கோவா எழுத்தாளர் மற்றும் ஞானபீட விருது பெற்றவர்), ரொமிலா தாபர், சுமித் சர்க்கார், கே எம் ஸ்ரீமாலி, தணிகா சர்க்கார், பிரபாத் பட்நாயக், உத்சா பட்நாயக், ஜெயதி கோஷ், சி.பி. சந்திரசேகர், ஜோயா ஹாசன், ஜீன் பத் ஷா, ஜீன் பாத் ஷா ஷா, ஆனந்த் பட்வர்தன் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் நியூஸ்கிளிக் இணையத்தை ஆதரித்து கையெழுத்திட்டுள்ளனர்.
இதுதான் சீனாவின் சிக்கலான பிரசார நெட்வொர்க்: வெளுத்து வாங்கிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
மேலும் அவர்கள் தங்களது அறிக்கையில், ''நியூயார்க் டைம்ஸில் வெளியான செய்தியின் அடிப்படையில் நியூஸ்க்ளிக் என்ற ஆன்லைன் செய்தி இணையதளம் மற்றும் அதன் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதை நாங்கள் கண்டிக்கிறோம். நியூஸ்க்ளிக் எந்த சட்டத்தையும் மீறியதாக நியூயார்க் டைம்ஸ் குற்றம்சாட்டவில்லை.
துல்லியமான அரசாங்க கொள்கைகள், அவற்றின் மீதான நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் மீது அவற்றின் தாக்கம் தொடர்பான கட்டுரைகளை, வீடியோக்களை நியூஸ்க்ளிக் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்படும் பிரிவினர், தொழிலாளர்கள், விவசாயிகளின் போராட்டங்களை முன்னிலைப்படுத்தி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இவர்களது வலிகளை நியூஸ்கிளிக் அங்கீகரித்து வருகிறது. தனிப்பட்ட பத்திரிகை ஆசிரியர்களின் பகுப்பாய்வுகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றுள்ளது.
NewsClick மீதான இந்த ஆக்ரோஷமான தாக்குதல் என்பது, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும். எந்தவொரு ஜனநாயகத்திலும், அரசாங்கத்தின் தோல்விகள் குறித்து எடுத்துரைப்பது, எச்சரிப்பதும் சுதந்திரமான பத்திரிகை ஜனநாயகமாக பார்க்கப்படுகிறது. அநீதிக்கு எதிராகப் போராடி தங்களுக்கு தேவையான உரிமைகளைப் பெறுவதற்கு நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு. இந்த உரிமையும் பறிக்கப்படுகிறது. கார்ப்பரேட் ஊடகங்களின் கைகளில் இன்று ஊடகங்கள் உள்ளன. இது மிகவும் துரதிஷ்டவசமானது. சுதந்திரமான ஊடகங்கள் நசுக்கப்படுவது வருத்தமளிக்கிறது. நியூஸ் கிளிக்கிற்கு எதிராக கடுமையான ஊடக விசாரணை நடத்தப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது.
நியூஸ்கிளிக் மீது தாக்குதல் நடத்தப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அரசியமைப்புச் சட்டத்தின் கீழ் சுதந்திர பேச்சு உரிமை, கருத்துரிமை அளிக்க நாங்கள் நியூஸ்கிளிக் இணையத்திற்கு ஆதரவு அளிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.