டெபிட் கார்டு இல்லையா கவலை வேண்டாம்: செல்போன் மூலம் ஏடிஎம்-இல் பணம் எடுப்பது எப்படி?
டெபிட் கார்டு இல்லாமல் செல்போன்களில் உள்ள யுபிஐ ஆப் மூலம் ஏடிஎம்-களில் பணம் எடுக்க முடியும்
இன்று நம்மில் பலர் யுபிஐ பேமெண்ட் வசதிகளை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். பெரிய கடைகள் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகள் வரை QR கோடை ஸ்கேன் செய்து யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி வந்து விட்டது. அரசு அலுவலங்களில் கூட யுபிஐ பேமெண்ட் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. யுபிஐ பயன்பாடு காரணமாக பலரும் டெபிட் கார்டுகளையோ, கையில் பணமோ வைத்திருப்பதில்லை.
ஆனால், சில சமயங்களில் யுபிஐ வசதி இல்லாதபோது ஏடிஎம் மையங்களுக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது. அப்படிப்பட்ட தருணங்களில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் கையில் இல்லை என்றால் என்ன செய்வது. இனி கவலை வேண்டாம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் இல்லாமலேயே ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்படி, Interoperable Cardless Cash Withdrawal (ICCW) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா வழங்கி வருகிறது. இந்த அம்சத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் யுபிஐ ஆப்களை பயன்படுத்தி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கலாம்.
குறைந்த விலையில் தக்காளி: ஆந்திராவில் போட்டி போட்டு கொண்டு விற்கும் அரசியல் கட்சிகள்!
அதன்படி, கார்டு இல்லாமல் செல்போனில் உள்ள யுபிஐ செயலியை பயன்படுத்தி QR கோட் மூலம் பணம் எடுக்கும் வசதிகளை சில வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. பயனர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் யுபிஐ சேவையை வழங்கும் ஆப்களை, அதாவது கூகுள் பே, போன்-பே போன்று; அல்லது உங்கள் வங்கியின் மொபைல் பேங்கிங் செயலி மூலம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-களில் பணம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்டு இல்லாமல் செல்போன் மூலம் ஏடிஎம்-இல் எப்படி பணம் எடுப்பது?
** முதலில் Interoperable Cardless Cash Withdrawal (ICCW) வசதி இருக்கும் ஏடிஎம்-க்கு செல்ல வேண்டும்.
** ஏடிஎம்-இல் பணத்தை திரும்பப் பெறுவதற்கான (cash withdraw) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
** ஏடிஎம் இயந்திரத்தின் திரையில் தோன்றும் UPI விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
** அதன் பிறகு, ATM திரையில் QR குறியீடு காண்பிக்கப்படும்.
** அந்த QR குறியீடை யுபிஐ சேவையை வழங்கும் அப்ளிகேஷன் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். அல்லது மொபைல் பேங்கிங் செயலியில் உள்ள QR cash withdrawal ஆப்ஷனை க்ளிக் செய்து அதன் மூலமும் ஸ்கேன் செய்யலாம்.
** அதன்பின்னர் எவ்வளவு பணம் தேவை என்பதை பதிவிட வேண்டும்.
** இதையடுத்து யுபிஐ பாஸ்வேர்ட் கேட்கப்படும். உங்களது யுபிஐ பாஸ்வேர்டை கொடுத்து, Proceed பட்டன் அல்லது Press here for cash என்பதை க்ளிக் செய்து பணம் எடுக்கலாம்.
தினசரி அல்லது ஒரு முறை எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதை அந்தந்த வங்கிகள் நிர்ணயம் செய்கிறது. டெபிட் கார்டு பயன்பாட்டுக்கு உள்ள வழிமுறைகளே யுபிஐ மூலம் பணம் எடுப்பதற்கும் பொருந்தும் என தெரிகிறது. அதாவது எத்தனை முறை ஒரு மாதத்துக்கு பணம் எடுக்கலாம்; எவ்வளவு எடுக்கலாம்; சொந்த வங்கி ஏடிஎம்-களில் எத்தனை முறை எவ்வளவு பணம் எடுக்கலாம்; மற்ற வங்கி ஏடிஎம்-களில் எத்தனை முறை எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பது போன்றவற்றை அந்தந்த வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன.