ஃபாஸ்டேக்கில் தவறாக கழிக்கப்படும் பணத்தை எப்படி திரும்பப் பெறுவது?
ஃபாஸ்டேக்கில் தவறாக கழிக்கப்படும் பணத்தை திரும்பப் பெறுவது எப்படி என்பது பற்றி இங்கு காணலாம்
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. இங்கு கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசலும், நேர விரயமும் ஏற்படுகிறது.
இதனை களையும் பொருட்டு, ஃபாஸ்டேக் எனும் மின்னணு முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த ஃபாஸ்டேக் முறை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
2022 ஆம் ஆண்டில் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் உட்பட ஃபாஸ்டேக் மூலம் மொத்த சுங்க வசூல் ரூ.50,855 கோடியாக இருந்தது. இது 2021 ஆம் ஆண்டின் ரூ.34,778 கோடியுடன் ஒப்பிடுகையில் சுமார் 46 சதவீதம் அதிகமாகும்.
ஃபாஸ்டேக் உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மூலம் நேரடியாக உங்கள் ஃபாஸ்டேக் கணக்கிற்கு பணம் செலுத்த முடியும். ஒவ்வொரு முறையும் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும் போது, ஃபாஸ்டேக் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும். ஆனால், சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையில் அண்மைக்காலமாக பலர் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். சில சமயங்களில் கூடுதலாக பணம் கழிக்கப்பட்டு விடுவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், அதுபோன்று கழிக்கப்பட்ட தொகையை திரும்பப் பெற வாகன உரிமையாளருக்கு உரிமை உண்டு. இது குறித்து அவர்கள் புகார் அளித்தால், அத்தகைய புகார்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தவறாக கழிக்கப்பட்ட பணம் 20 - 30 வேலை நாட்களுக்குள் வாகன உரிமையாளருக்கு திருப்பி அளிக்கப்படும்.
எப்படி புகார் அளிக்க வேண்டும்?
ஃபாஸ்டேக் மூலம் தவறாக பணம் கழிக்கப்பட்டால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) கட்டணமில்லா உதவி எண்ணை -1033 தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். உங்கள் பகுதியில் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களிலும் புகார் அளிக்கலாம்.
அதேபோல், நீங்கள் ஃபாஸ்டாக் பெற்ற வங்கியின் உதவி மைய எண்ணிலும் புகார் அளிக்கலாம். அந்த எண் தெரியவில்லை என்றால், www.npci.org.in/what-we-do/netc-fastag/netc-fastag-helpline-number இந்த இணைய பக்கத்தை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.