Asianet News TamilAsianet News Tamil

அசால்ட்டா கேப்பாங்க... அதட்டியும் கேப்பாங்க.. ஆதார மட்டும் சொல்லிடாதீங்க! ‘அது’ அபேஸ் ஆயிடும்!

how money would transferred by fraudulent by asking otp when sim card aadhaar linking process
how money would transferred by fraudulent by asking otp when sim card aadhaar linking process
Author
First Published Oct 13, 2017, 5:46 PM IST


சொல்லப்போனால்.. இது வடிவேலு காமெடி சீன் மாதிரிதான். ஆனால் சீன் முடிந்ததும் அது டிராஜடி ஆகிவிடும். அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

இப்போது, செல் போன் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது. ஜியோ சிம் கார்டு பெறும் போது, முதலிலேயே ஆதார் எண் பெற்று பிறகே சிம் கார்ட் கொடுக்கப்பட்டது. இப்போது, மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, ஒவ்வொருவரின் ஆதார் எண்ணுடனும் அவர் பயன்படுத்தும் சிம் கார்டுகள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒருவர் எத்தனை சிம் கார்டுகள் பயன்படுத்துகிறார் என்றும் தெரியவரும். அதேநேரம், சிம் கார்டுகளை பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்துவதும் முறைகேடாக  கையாளப்படுவதும் தடுக்கப்படுவதாக அரசு கூறுகிறது. 

நாடு முழுவதும் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.  தனி நபரின் தொலைபேசி, பான் கார்டு, வங்கிக் கணக்கு, ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) உள்ளிட்ட அனைத்தும் ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆதார் எண் உடன் தனது தொலைபேசி எண்ணை இணைப்பது தொடர்பான விஷயத்தில், ஓர் இளைஞர் ரூ. 1.3 லட்சம் இழந்திருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார், மும்பையைச் சேர்ந்த சாஷ்வந்த் குப்தா. இவர்  தனது ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க முயன்றார்.  அப்போது, குப்தாவின் செல் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதில் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண் 121க்கு, உங்கள் சிம் கார்டு எண்ணுடன் மெசேஜ் செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. இது, தான் மேற்கொண்ட ஆதார் -செல்போன் நம்பர் இணைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி என நினைத்த குப்தா, அதன்படியே செய்தார். 

ஆனால், அவர்  எஸ்.எம்.எஸ் அனுப்பிய சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண் செயலிழந்தது. இதை அடுத்து பதற்றமடைந்த அவர், தனக்கு வந்த மெசேஜ் எண்ணுக்கு  தொடர்பு கொண்டபோது அது செயல்படவில்லை.  இதற்குள் குப்தாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1.3 லட்சம் அபேஸ் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.  இதை அடுத்து அவர் காவல் துறையில் புகார் செய்தார்.  போலீஸாரும் இந்த மோசடி குறித்து விசாரித்து வருகின்றனர். 

இந்த மோசடி எப்படி சாத்தியம் என்கிறீர்களா? ஹரிஹரசுதன் தங்கவேலு என்ற வாசகர், இது குறித்து விலாவாரியாக எழுதி நமக்கு அனுப்பியிருந்தார். அதில் இருந்து... இப்படித்தான் பலரும் அனுபவித்திருக்கின்றனர்.  உங்கள் ஆதார் எண்ணை உங்கள் மொபைல் நம்பரோடு இணைத்து விட்டீர்களா? என்று மெசேஜ் வரும். இப்படி பணத்தை இழந்த குப்தாவும் கொஞ்சம் உஷார் நபர்தான். அவருக்கு அனைத்து தகிடுதத்தங்கள் குறித்தும் தெரியும் என்றாலும், ஆதார் எண்ணைத்தானே வங்கியில் இருந்து கேட்கிறார்கள் என்று அசால்டாக இருந்திருக்கிறார்.  

போனில் பேசியவர்களுடன் இப்படித்தான் இருந்திருக்கிறது அந்த உரையாடல்! 

“வணக்கம், ஏர்டெல்லில் இருந்து பேசுகிறோம், உங்கள் ஆதார் எண்ணை இணைத்து விட்டீர்களா ?”

“இல்லைங்க , இன்னும் இல்லை”

“சார்! அரசு உத்தரவுப்படி இன்னும் சில நாட்களுக்குள் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும், நீங்கள் விரும்பினால் இந்த அழைப்பின் வழியாகவே உங்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம், உங்களிடம் ஆதார் எண் இருக்கிறதா ?”

“இருக்கு, சொன்னா போதுங்களா, நீங்களே அப்டேட் பண்ணிடுவீங்களா ?”

“நிச்சயமாக சார், உங்களுக்கு உதவுவதற்க்காவே இந்த வசதி, உங்கள் ஆதார் எண்ணை சொல்லுங்கள்!” (ஆதார் எண்ணை சொல்கிறார்,)

“ஆதார் எண் தந்ததிற்கு நன்றி, உங்கள் எண் இந்த மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டுவிட்டது வாழ்த்துக்கள், இன்னும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், அதை செய்தால் மட்டுமே நீங்கள் தான் இந்த மொபைல் எண் உபயோகிப்பாளர் என எங்களால் உறுதி செய்துகொள்ளமுடியும்,”

"என்ன பண்ணணும்ங்க ?”


“உங்களது சிம் கார்டில் உள்ள 20 இலக்க சிம் எண்னை மெஸேஜில் SIM என டைப் செய்து ஏர்டெல்லின் 121 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு அனுப்பவும், அனுப்பிய பிறகே உங்கள் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி முழுமையடையும்,”

(யோசிக்கிறார்) 

“மேடம் ! சிம்மு போனுக்குள் இருக்குது, அந்த நம்பர் எனக்கு தெரியாதுங்களே”

“கவலை வேண்டாம் சார், உங்கள் சிம் நம்பரை இப்போது உங்களுக்கு மெஸேஜில் அனுப்பியுள்ளேன், அதை அப்படியே 121 என்ற எங்களது சேவை மைய எண்ணிற்கு அனுப்பவும், நன்றி”

“121 க்கு தானுங்க அனுப்பனும், வேற எங்கியும் இல்லீங்களே, ஏன்னா ஊர் பூரா முடிச்சவிக்கு பசங்க புதுபுதுசா ஏமாத்தறானுக, அதான் கேக்குறங்க”

“சார், இது ஏர்டெல்லின் அதிகார பூர்வ அழைப்பு, 121 எங்களது அதிகாரபூர்வ வாடிக்கையாளர் சேவை மையம், அதற்கு மட்டுமே அனுப்பினால் போதும். நன்றி"


இப்படி நமக்கு ஒரு போன் வந்தா எத்தனை பேர் 121 க்கு சிம் நம்பர் அனுப்பியிருப்போம், கிட்டத்தட்ட எல்லோருமே, இல்லையா !! 

அதே போலத்தான் இவரும் அனுப்பியிருக்கிறார், அனுப்பிய சிலமணிநேரங்களில் இவரது அக்கவுண்டில் இருந்து தொடர்ந்து 10000 , 20000 என சரமாரிக்கு பணம் உருவப்பட்டு, இவர் சேர்த்து வைத்திருந்த Fixed Deposits உட்பட 1.30 லட்சங்களை மொத்தமாக 18 மணி நேரத்தில் அபேஸ் பண்ணிவிட்டார்கள்... 

ஐயோ, இதெப்படி சாத்தியம் என்கிறீர்களா, சாத்தியமே !!

உங்கள் வங்கி கணக்குகளின் இணைய சேவை பாஸ்வேர்ட் மாற்றுவது, ஏடிஎம் பின் நம்பர் மாற்றுவது, புதிய அக்கவுண்டகளை இணைத்தல், பண பரிமாற்றம் என எதை இணைத்தாலும், மாற்றினாலும் அவை எல்லாமே ஒன்றே ஒன்றை அடிப்படையாக கொண்டே மாற்ற முடியும், அது உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP, அந்த OTP யை பெற்றே மேற்சொன்ன மோசடியை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
 
எப்படி ?

ஏர்டெல் 3G யில் இருந்து 4G சிம்முக்கு உங்கள் எண்ணை மாறுங்கள், ப்ரீ ப்ரீ என ஊர் பூரா கூவி கொண்டிருக்கிறது, இதற்காக ஒரு சேவையை தொடங்கியது, வாடிக்கையாளருக்கு இலவசமாக 4G சிம் கார்டுகளை தர தொடங்கியது, 

அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், SIM என டைப் செய்து 20 இலக்க புது சிம் எண்னை 121 க்கு அனுப்பிவிட்டால் இரண்டு மணிநேரத்தில் புதிதாக தரப்பட்ட 4G சிம்மில் உங்கள் நம்பர் ஆக்டிவேட் ஆகிவிடும். 

பழைய சிம்மை தூக்கி போட்டுவிட்டு இதை செருகி 4G தரத்தில் உபோயோகிக்கலாம், இந்த சேவையை தான் இந்த திருடர்கள் உபயோகித்து கொண்டனர். 

‘எனக்கு சிம் நம்பர் தெரியாதுங்க’ என்று சொன்னதும் அவர்கள் அனுப்பினார்கள் பாருங்கள் ஒரு சிம் நம்பர்...  அது உங்கள் போனில் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் சிம்மின் 20 இலக்க எண் அல்ல, அவர்கள் கை வசம் ஆக்டிவேட் ஆக தயார் நிலையில் உள்ள ஒரு 4G சிம்! 

அவர்கள் அனுப்பிய மெஸேஜை 121 க்கு நீங்கள் அனுப்பியதால், சில மணி நேரங்களில் உங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அவர்கள் சிம்மில் உங்கள் எண் ஆக்டிவேட் ஆகிவிடும். பிறகு OTP என்ன, உலகமே உங்களிடம் பேச நினைத்தாலும் எல்லா அழைப்புகளும் அவர்களுக்குத்தான் போகும். 

எவ்வளவு எளிமையாக, நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்! 

மேற்சொன்ன மோசடியில் முதல் 3000 உருவப்பட்ட போதே தனது கணக்கு இருக்கும் ஐசிஐசிஐ வங்கிக்குச் சொல்லி அக்கவுண்ட்டை தற்காலிகமாக முடக்கச் சொல்லியிருக்கிறார் இளைஞர். ஆனால் ICICI தேமே என 18 மணி நேரம் தேவுடு காக்க, அதற்குள் மொத்த வைப்பு தொகையையும் சுருட்டிவிட்டார்கள். 

இந்த மாதிரி நூதன, எளிமையான, மிக மிக நம்பிக்கை தரும் வகையில் நீங்களும் ஏமாற்றப்படலாம்... எக்காரணம் கொண்டும் OTP எண், PIN நம்பர் போன்றவைகளை யாரிடமும் பகிராதீர்கள், மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து கவனமாக உங்கள் கையிருப்பை காத்திடுங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios