இந்திய- சீன எல்லையான லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த 76 இந்திய வீரர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இந்திய ராணுவம் தரப்பில், ’’காயமடைந்தவர்கள் மீண்டும் விரைவில் பணிக்கு திரும்புவார்கள். காயமடைந்த வீரர்களில், 18 பேர் லேவில் உள்ள மருத்துவமனையில் உள்ளனர். இவர்கள் 15 நாட்களுக்குள் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்ற ராணுவ வீரர்கள் இதர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு வாரத்தில் பணிக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

கர்னல் பி.கே.சந்தோஷ் பாபு தலைமையிலான இந்திய வீரர்கள் சீன வீரர்களுக்கு சொந்தமான கூடாரத்தை அகற்ற முயன்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில்தான் இருபது ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த மோதல் ரோந்து பகுதி 14 எனப்படும் ஒரு இடத்தில் நடந்துள்ளது. இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான நடைமுறை எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இருந்து சில கி.மீ தூரத்தில் உள்ளது.

இந்த பகுதியிலிருந்து ராணுவ வீரர்கள் கால்வான் பள்ளத்தாக்கிலுள்ள இந்தியாவின் பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம். இந்த 15,000 அடி உயர இமயமலை பகுதியிலே திங்களன்று நூற்றுக்கணக்கான வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில், இந்திய வீரர்கள் இரும்புக் கம்பிகளால், முட்கம்பிகளால் மூடப்பட்டிருந்த கற்களால் தாக்கப்பட்டுள்ளனர். பிற்பகல் தொடங்கிய இந்த மோதல் நள்ளிரவு வரை நீடித்துள்ளது.

சீன தரப்பிலிருந்து உயிரிழப்புகள் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை. குறைந்தது 45 சீன ராணுவ வீரர்கள் இந்த மோதலில் உயிரிழந்து இருக்கலாம் என அந்நாட்டு ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.