பீகார் தார்பாங்கா மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காலாவதியான ரத்தம் ஏற்றியதால் இரண்டு வாரங்களில் 8 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பீகாரில் தார்பாங்கா மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த  மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ரத்தம் வழங்கும் துறையில் ரத்தம் அடங்கிய பைகளில் அச்சிடப்பட்டு இருந்த தேதி மற்றும் பேட்ஜ் எண் சேதப்படுத்தப்பட்டு, நோயாளிகளுக்கு செலுத்த கொடுக்கப்பட்டு உள்ளது என ஜூனியர் டாக்டர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

மேலும், நோயாளிகளுக்கு காலாவதியான ரத்தம் ஏற்றியதால் இரண்டு வாரங்களில் 8 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சந்தோஷ் மிஷ்ரா மற்றும் துணை கண்காணிப்பாளர் பாலேஷ்வர் சாகர் விசாரணை நடத்த 6 நபர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்டு உள்ளனர். 

இந்த விசாரணை குழுவில் மருத்துவமனையின் அனைத்து பிரிவு தலைவர்களும் இடம்பெறுவார்கள் எனவும் விசாரணை அறிக்கையானது ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டியா தெரிவித்துள்ளார்.