புதுச்சேரியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சாரதாம்பாள் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி மாநிலத்தில் 15-18 வயதுடைய 83 ஆயிரம் சிறார்களில் , 31 ஆயிரம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள சிறார்களுக்கு 3 நாட்களில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பள்ளியில் படிக்காத மாணவர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், பொங்கல் பண்டிகையை மக்கள் எச்சரிகையோடி கொண்டாட வேண்டும், மக்களின் உணர்வுகளை மதித்து விழாக்கள் கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ளதால் பொதுமக்கள் கட்டுப்பாடோடு பொங்கலை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் காணும் பொங்கலில் அதிக அளவில் கூட்டம் கூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், புதுச்சேரியில் மட்டும் கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை, உலகம் முழுவதும் ஓமிக்ரான் தன்மை காரணமாக வேகமாக பரவி வருகிறது என்றும், கொரோனா, ஓமிக்ரான், டெல்டாகாரன் அருகில் இருக்கிறான் என நகைச்சுவையாக கூறிய அவர், விஞ்ஞானிகள் இதற்கு ஊரடங்கு தீர்வு கிடையாது என கூறியிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் நாளைய தினம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தேசிய இளைஞர் திருவிழாவை காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளதாகவும், இதில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கின்றனர் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரியில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக தற்போது பள்ளிகளை நடத்தி வருவதாகவும், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என கூறிய தமிழிசை, புதுச்சேரி மக்களுக்காக ஆளுநர் மற்றும் முதல்வர் இணக்கமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.