Hitler and Mussolini ideals must be defeated by BJP
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற பா.ஜனதா தலைவர்கள் நினைத்தால், அதை தடுத்து, பாதுகாக்கும் சக்தி, எனக்கும், என் கருத்தை ஒத்த மற்ற தலைவர்களுக்கும் இருக்கிறது, ஹிட்லர், முசோலினி சித்தாந்தங்களை வைத்து இருக்கும் பா.ஜனதா தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று தலித் அமைப்பு தலைவரும், குஜராத் எம்.எல்.ஏ.வுமான ஜிக்னேஷ் மேவானி சவால் விடுத்துள்ளார்.
நிகழ்ச்சி
மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், பீமா-கோரேகான் போர் நினைவு தினம் தொடர்பான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் தலித் அமைப்பு தலைவரும், குஜராத் எம்.எல்.ஏ.வுமான ஜிக்னேஷ் மேவானி, ஜவஹர்லால் நேரு பல்கலையின் மாணவர் அமைப்பு தலைவர் உமர் காலித், மறைந்த தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தாய் ராதிகா, பிம் ராணுவ தலைவர் வினய் ரத்தன் சிங், அம்பேத்கர் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் தலித் அமைப்பு தலைவர் ஜிக்னேஷ் மேவானி பேசியதாவது-
புறம்தள்ளினர்
குஜராத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தலித்கள், சிறுபான்மையினர், விவசாயிகள், விழிம்புநிலை சமூத்தினர் ஆகியவை பா.ஜனதா கட்சியின் அகங்காரத்தை புறம்தள்ளிவிட்டனர். இதனால், அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 99 ஆக குறைந்துவிட்டது.
தடுக்க முடியும்
சமீபத்தில் மத்திய அமைச்சர் ஆனந்த குமார் ஹெக்டே, அரசியல்அமைப்புச் சட்டத்தை மாற்ற முயற்சிப்போம் என்று கருத்துக் கூறியுள்ளார். நாட்டின் ஜனநாயக முறையையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் மாற்ற முயற்சித்தால், அதை பாதுகாக்கும் சக்தி எங்களுக்கு இருக்கிறது.
என் கருத்தை ஒத்த மக்கள், நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியோர் எங்கள் வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையாக பா.ஜனதா கட்சிக்கு எதிராக 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எழுந்து நிற்போம்.
ஒன்று சேர்வோம்
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி 150 இடங்களில் வெற்றி பெறும் என்பதை முறியடித்து 99 இடங்களாகக் குறைத்துவிட்டோம். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பா.ஜனதாவுக்கு எதிராக போரிட்டால், 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவின் எம்.பி.க்கள் எண்ணிக்கையை இரட்டைபடை எண்ணிக்குக்குள் குறைத்துவிடலாம்.
தோற்க வேண்டும்
கர்நாடக , மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. அனைத்து ஏழை மக்களும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் ஒன்றாக இணைய வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் எனக்கு கவலையில்லை, ஆனால், முசோலினி, ஹிட்லர் மனப்பான்மை கொண்ட பா.ஜனதாவின் சித்தாந்தங்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
