சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும் நகரத்தில் சுற்றுச்சூழலை காக்கவும் மைசூர் நகரத்தில் வாடகை சைக்கிள் திட்டம் இந்த மாதம் துவங்கப்பட உள்ளது.

மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா நகரங்களில் மைசூர் ஒன்றாக உள்ளது. பாரம்பரிய நகரமான இங்கு அரண்மனை, சாமுண்டீஸ்வரி கோயில், மிருக காட்சி சாலை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த இடங்களை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

பொது மக்களுடன், சுற்றுலா பயணிகள் நகரத்தில் பயன்படுத்தும் வாகனங்களால் போக்குவரத்து அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் விதமாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் மாநில அரசு குளோபல் என்வைரான்மெண்ட் பெசிலிடி கிராண்ட் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து ட்ரின் ட்ரின் பை சைக்கிள் ஷேரிங் சிஸ்டம் எனப்படும் திட்டம் அமல்படுத்த முடிவு செய்து, இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

இத்திட்டத்தை கடந்த ஜூலை 17ம் தேதி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எச்.சி. மகாதேவப்பா அரண்மனை முன் துவக்கி வைத்தார். ஆனால், சைக்கிள் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிவடையாத காரணத்தால் இத்திட்டம் தாமதமாகி வந்தது.

தற்போது இதன் பணிகள் முடிந்து வரும் 15ம் தேதிக்குள் பொது மக்களுக்கு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்க கோரிக்கை வைக்கவும் மாநகராட்சி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

சுமார் ரூ.20 கோடி செலவில் அமல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் 400 சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது முதல் கட்டமாக 200 சைக்கிள்கள் தயாராக உள்ளது. இதற்காக நகரத்தில் மொத்தம் 22 சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் சைக்கிள்களுக்கு ஸ்வைப் கார்டு இயந்திரங்கள் பொருத்தப்படுகிறது. மேலும் 18 இடங்களில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. வாடகை சைக்கிள் பெற விருப்பம் உள்ளவர்களுக்கு அரண்மனை, ரயில் நிலையம், பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி மற்றும் மிருககாட்சி சாலை ஆகிய இடங்களில் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதில் தங்களது அடையாள அட்டை மற்றும் விலாசம் கொடுத்து பெயரை பதிவு செய்து கொள்பவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இந்த கார்டை சைக்கிளில் உள்ள ஸ்வைப் இயந்திரத்தில் ஸ்வைப் செய்து சைக்கிளை பெற்று கொள்ளலாம்.

முதல் ஒரு மணி நேரத்திற்குரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படும். அதற்கு பின் ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ரூ. 10 கட்டணம் கொடுக்க வேண்டும்.

இதற்காக அரண்மனை, பிலோமினா தேவாலயம், மிருககாட்சி சாலை, மால் ஆப் மைசூரு, ரயில் நிலையம், காரஞ்சிகெரே, தேவராஜ்அரஸ் சாலை, நீதிமன்றம், குக்கரஹள்ளிகெரே, ஜெகன்மோகன் அரண்மனை, ஆகாசவாணி, சாமுண்டி மலை, ஜெயநகர், ராமசாமிசர்க்கிள், ஜேஎஸ்எஸ் கல்லூரி, ஊட்டி சாலை ஆகிய இடங்களில் சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

ஸ்மார்ட் கார்டு பெற்று கொண்ட பின்னர் எங்கு வேண்டுமானாலும் சைக்கிளை பெற்று கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.