கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் தீவிரமாகிவரும் நிலையில், கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. எனவே மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

வீட்டை விட்டு வெளியே வர நேர்ந்தால், மாஸ்க் அணிந்து வருமாறும், கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், கைகளை கண்கள், மூக்கு, காதுகள் ஆகியவற்றை தொடாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காக கிருமிநாசினி, சோப், ஹேண்ட்வாஷ் ஆகியவற்றை மக்கள் பெருமளவில் வாங்குகின்றனர். இதை பயன்படுத்தி மாஸ்க் மற்றும் கிருமிநாசினிகள் அதிக விலைக்கு விற்கப்பட்டுவரும் நிலையில், ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட், பதஞ்சலி மற்றும் கோட்ரேஜ் ஆகிய நிறுவனங்கள், சோப், ஹேண்ட்வாஷ், கிருமிநாசினி ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதுடன் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. 

மக்களின் நலனுக்காக லைஃப்பாய் சோப், லைஃப்பாய் ஹேண்ட்வாஷ், சோப் மற்றும் டோமெக்ஸ் ஃப்ளோர் கிளீனர் ஆகியவற்றின் விலையை 15% குறைக்க முடிவு செய்துள்ளதாக ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக சோப், ஹேண்ட்வாஷ், கிருமிநாசினி மற்றும் சுத்தம் சம்மந்தமான பொருட்கள் அடுத்த சில வாரங்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கும் வண்ணம் அதிகமாக உற்பத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதேபோல பதஞ்சலி நிறுவன சோப், ஹேண்ட்வாஷ் ஆகிய சுத்தம் சம்மந்தமான பொருட்களின் விலையையும் குறைக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதேபோலவே கொட்ரேஜ் நிறுவனமும் அவை தயாரிக்கும் சோப்பின் விலையை குறைக்க முன்வந்துள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்களே உதவமுந்துள்ள நிலையில், பொதுமக்கள் கூடுதல் பொறுப்புடன் தனிமைப்படுத்தி கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவுக்காக விடுக்கப்பட்டிருக்கும் விடுமுறைகளை வெளியே சுற்றித்திரிவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ளாமல், நம்மால் மற்றவர்களுக்கு பிரச்னை ஏற்படாத வண்ணம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.