இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் தான் இந்தியா ஜனநாயக நாடு இருப்பதாக அகில பாரதிய சந்த் பரிஷத்தின் இமாச்சல பிரதேச பொறுப்பாளர் யதி சத்யதேவானந்த் சரஸ்வதி சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ள சாமியார் யதி நரசிங்கானந்தின் அமைப்பு, இந்தியா இஸ்லாமிய நாடாக மாறுவதைத் தவிர்க்க அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்குமாறு இந்துக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.ஹரித்வாரில் நடந்த இந்து அமைப்பு நிகழ்ச்சியில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த யதி நரசிங்கானந்த், இந்த மாத தொடக்கத்தில் மதுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வரும் பத்தாண்டுகளில் நாடு இந்துக்கள் குறைவாக மாறுவதைத் தடுக்க அதிக குழந்தைகளை பெற்றெடுக்குமாறு வலியுறுத்தினார்.
இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் தான் இந்தியா ஜனநாயக நாடு இருப்பதாக அகில பாரதிய சந்த் பரிஷத்தின் இமாச்சல பிரதேச பொறுப்பாளர் யதி சத்யதேவானந்த் சரஸ்வதி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஹிமாச்சல பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள முபாரக்பூரில் எனும் இடத்தில் 'தரம் சன்சாத்' இந்து அமைப்பு சார்பில் மூன்று நாள் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கலந்துக்கொண்டு பேசிய யதி சத்யதேவானந்த் சரஸ்வதி,” முஸ்லிம்கள் திட்டமிட்ட முறையில் பல குழந்தைகளைப் பெற்றெடுப்பதன் மூலம் தங்கள் மக்கள்தொகையை அதிகரித்து வருகின்றனர் என்றும் அதனால்தான், இந்தியா இஸ்லாமிய நாடாக மாறுவதைத் தவிர்க்க, இந்துக்களிடம் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்குமாறு எங்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது,” என்று பேசினார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது, அண்டை நாடான பாகிஸ்தானைப் போல இந்தியாவும் இஸ்லாமிய நாடாக மாற்றப்படும் என்று அவர் கூறினார். அதனால்தான், இந்தியா இஸ்லாமிய தேசமாக மாறுவதைத் தவிர்க்க, இந்துக்களிடம் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்குமாறு எங்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.இரண்டு குழந்தைகள் என்ற தேசியக் கொள்கைக்கு எதிரானது அல்லவா என்று கேட்டபோது, "குடிமக்கள் இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்கச் சொல்லும் சட்டம் நம் நாட்டில் இல்லை" என்றார்.
ஆனால் முன்னதாக இந்த நிகழ்ச்சியில் எந்த ஒரு மதத்தையும் சாதியையும் புண்படுத்தும் வகையில் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என்று இமாச்சல காவல்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அந்த நோட்டீஸ் காவல்துறை சட்டம், 2007யின் படி பிரிவு 64 யின் கீழ் வழங்கப்பட்டது. அதில் இதனை மீறும் வகையில் ஏதேனும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கபட்டிருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 17-19 தேதிகளில் ஹரித்வாரில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகள் நடத்தப்பட்டதாக தர்ம சன்சத் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாகக் கூறி நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் நடந்த 'இந்து மகாபஞ்சாயத்' நிகழ்ச்சியிலும் பங்கேற்று, ஒரு முஸ்லீம் இந்தியாவின் பிரதமரானால், 20 ஆண்டுகளில் 50 சதவீத இந்துக்கள் மதம் மாறுவார்கள் என்றும், இந்துக்களை ஆயுதம் ஏந்துமாறும் அறிவுறுத்தினார். மேலும் இந்துக்கள் தங்கள் இருப்புக்காக போராடும் நிலை ஏற்படும் என்று கூறினார்.
