உத்தர பிரதேசத்தில் இந்துமகா சபை தலைவர் கம்லேஷ் திவாரி அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோவில் இந்துமகா சபை என்ற அமைப்பின் தலைவர் கம்லேஷ் திவாரியின் அலுவலகம் உள்ளது. இன்று மதியம் குர்ஷிதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் சிலர் திவாரியை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பைசாபாத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.