Hindi is not our national language and dont force to others said sasi thaaroor
இந்தி நம்முடைய தேசிய மொழி அல்ல, யார் மீதும் இந்தியை திணிக்காதீர்கள் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆமதாபாத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசிய மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு “ இந்தி என்பது நாட்டின் தேசிய மொழி. இந்தி இல்லாமல், புறக்கணித்துவிட்டு நாட்டுக்கு வளர்ச்சி என்பது சாத்தியமில்லாதது. நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தி மொழி பேசுகிறார்கள்.ஆதலால், இந்தி கற்றுக்கொள்வது அவசியமானது ’’ எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே பாஸ்போர்ட்டில் இதுவரை ஆங்கிலம் மட்டுமே அச்சிடப்பட்டு இருந்து வருகிறது. இனிமேல், பாஸ்போர்ட், ஆங்கிலம் மட்டுமல்லாமல், இந்தியிலும் அச்சடிக்கப்படும் என மத்திய வௌியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் அறிவித்தார். மேலும், அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் அறிவிப்பு பலகையில் இந்தி இடம் பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதுபோன்று இந்தி பேசாத மாநிலங்கள் மீது மெல்ல மெல்ல இந்தி மொழியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு முயல்வதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்நிலையில், வெங்கையா நாயுடுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் வௌியிட்ட பதிவில், “ இந்தி என்பது நம்முடைய தேசிய மொழி கிடையாது. இந்தி மொழி நாட்டில் பெருவாரியான மக்களால் பேசப்படும் ஒரு மொழிதான். பயன்பாட்டில் இருக்கும் ஒரு மொழி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆதலால், யாரையும் இந்தி மொழி படியுங்கள் என்று கட்டாயப்படுத்தகூடாது, யார் மீதும் இந்தியை திணிக்க கூடாது’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
