எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம். இந்த நச்சுக் கருத்தை எதிர்த்துப் போராடும் காலம் வந்திருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, திகார் சிறையில் இருந்தாலும் அவ்வப்போது மத்திய அரசுக்கு எதிராக தமது குடும்பத்தினர் மூலமாக டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், இந்தி திணிப்புக்கு எதிரான ஆழமான கருத்தை ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது. தமிழ் இனம் வேறு, தமிழ் மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான், எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம்.

எல்லா மொழிகளின் வளர்ச்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் இந்தி மட்டுமே இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் என்ற கருத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மேலும், இந்தி திணிப்புக்கு எதிராக 20-ம் தேதி அன்று திமுக சார்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.