இமாச்சல பிரதேசத்தில் கடும் உறைபனி - குளிரின் தாக்கத்தால் 7 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேச மாநிலத்தில் குளிரின் தாக்கம் மேலும் தீவிரமாகி வருகிறது. இந்த இயற்கை சீற்றத்திற்கு இதுவரை அங்கு 7 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இந்த தட்பவெப்ப நிலை மேலும் கடுமையாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மலைகள் சூழ்ந்த இயற்கை அழகு பிரதேசமான ஹிமாச்சலப்பிரதேசம் தற்போது கடும் குளிரில் சிக்கித் தவிக்கிறது.

அங்கு உறைபனி சீசன் தொடங்கிய நாள்முதல், தொடர்ந்து, குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

எங்கு பார்த்தாலும் பல அங்குலம் அளவிற்கு பனிக்கட்டிகள் சூழ்ந்து காணப்படுகின்றன.

தலைநகர் சிம்லாவில் நிலைமை சற்று மோசமாகி இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு மைனஸ் 3 புள்ளி 2 டிகிரி செல்சியஸ் டிகிரியாக தட்பவெப்பம் குறைந்திருப்பதால், குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்த கடும் குளிருக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து உறைபனிப் பொழிவு நிலவுவதால், போக்குவரத்து மற்றும் மின்சார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், வீடுகளின் கூரைகள், மரங்கள் போன்றவை வெள்ளைப் போர்வை போர்த்தியது போல காணப்படுகிறது.

சாலைகளிலும் உறைபனி கட்டிகள் கொட்டிக்கிடக்கின்றன. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிம்லா மட்டுமின்றி இமாச்சலப்பிரதேசத்தின் மற்ற பகுதிகளான Lahaul-Spiti, Chamba மற்றும் Kangra போன்ற இடங்களிலும் வெப்பநிலை மைனஸ் டிகிரியாக உள்ளது.

இந்தப் பனிப்பொழிவு இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.