ராஜினாமா செய்யவில்லை: இமாச்சலப்பிரதேச முதல்வர் மறுப்பு!

முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு தெரிவித்துள்ளார்

Himachal Chief Minister Sukhvinder Singh Sukhu refuses his resignation smp

காங்கிரஸ் ஆளும் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் கட்சித் தலைமையின் உத்தரவை ஏற்று சுக்விந்தர் சிங் சுகு பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியின் புதிய முதல்வர் இன்று மாலைக்குள் தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், சுக்விந்தர் சுகு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு தெரிவித்துள்ளார். இமாச்சலப்பிரதேச மாநில அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் எனவும், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் என உறுதியாக தெரிவித்தார்.

விக்ரமாதித்ய சிங்கின் ராஜினாமா குறித்து அவர் கூறுகையில், “விக்ரமாதித்ய சிங்குடன் நான் பேசியுள்ளேன். எனது சகோதரர் போன்றவர் அவர். அவரது ராஜினாமாவை ஏற்க எந்த காரணமும் இல்லை. அவருக்கு சில குறைகள் உள்ளன. அவை தீர்க்கப்படும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைத்த தன்னை மன்னித்துவிடுங்கள் என்று மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த எம்எல்ஏக்களில் ஒருவர் கூறியுள்ளார். அவர்களுக்கு மாநில மக்கள் பதில் சொல்வார்கள். பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது  தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வந்துள்ளோம், அதற்கான விசாரணை நடந்து வருகிறது. நமது அரசை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டு, நமது அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்.” என்றார்.

முன்னதாக, நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு நடந்த தேர்தலின்போது, இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பாஜகவுக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதனால், பாஜக வேட்பாளர் வெற்றியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்தார். இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவையில் மொத்தம் 68 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 40 உறுப்பினர்களும், பாஜகவிடம் 25 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 6 உறுப்பினர்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்ததால், காங்கிரஸ் முதல்வர் சுக்விந்தர் சுகு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் ஆறு முறை முதல்வராக இருந்தவரும், காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்தவருமான தனது தந்தை வீர்பத்ர சிங்கிற்கு சிலை வைக்க மால் சாலையில் ஒரு சிறிய இடத்தைக் கண்டடைய இமாச்சல் அரசு தவறி விட்டதாக குற்றம் சாட்டிய பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்ப்பதில்லை: கனிமொழி!

அவருக்கு சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேரின் ஆதரவு பாஜகவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களினால் அம்மாநிலத்தில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் தனது அரசு வெற்றி பெறும் என முதல்வர் சுக்விந்தர் சுகு கூறியுள்ளார்.

மேலும், விக்ரமாதித்ய சிங் பாஜகவில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இமாச்சலப்பிரதேசத்தில், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இந்தநிலையில், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க காங்கிரஸ் மேலிடம் முயற்சித்து வருகிறது. 

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த விக்ரமாதித்ய சிங்கிடம் பாஜகவில் இணைவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நான் எதைச் சொன்னாலும், அது எப்போதும் உண்மைகள் மற்றும் சூழ்நிலை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. மாநிலத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. இன்று நிதி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.” என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios