இமாச்சல பிரதேசத்தில் உணவக கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.  மேலும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் எதிரொலியாக அம்மாநிலத்தில் சோலன் பகுதியில் நேற்று மாலை அடுக்குமாடி தாபா உணவ கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. 

இதுதொடர்பாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அடுக்குமாடி ஓட்டலின் மறுபக்கம் இடிந்து விழுந்தது. 

இந்த விபத்தில் 13 ராணுவ வீரர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பொதுமக்கள், 5 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அப்பகுதிக்கு 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.