சாதிவாரி கணக்கெடுப்பு.. நீட் இல்லை.. கல்விக்கடன் ரத்து.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை. மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு,
- நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இருக்காது. மாநில அரசு கல்வி நிறுவனங்களில் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம்.
- நாடு முழுவதும் சமூக பொருளாதார அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும்.
- 10 சதவீத இட ஒதுக்கீடு சாதி பாகுபாடுமின்றி அனைத்து சாதியினருக்கும் வழங்கப்படும்.
- அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- 2024 மார்ச் மாதம் வரையில் பெறப்பட்ட கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
- 30 லட்சம் காலிப்பணியிடம் நிரப்பபடும்.
- பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்டம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும்.
- பாஜகவில் சேர்ந்து குற்றவழக்கில் இருந்து தப்பித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுவார்கள்.
- பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும்
- செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பெண் ஒருவருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும்.
- தேர்தல் பத்திர முறைகேடு விசாரணை நடத்தப்படும்.
- பிஎம் கேர்ஸ் நிதி முறைகேடு விசாரிக்கப்படும்.
- ஊடக சுதந்திரம் மீட்டு எடுக்கப்படும்.
- பாஜக வலியுறுத்தும் ஒரு நாடு, ஒரு தேர்தல் முறை கொண்டு வரப்படாது.
- அரசு தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படும்.
- குறைந்தபட்ச ஆதார விலை கொண்டு வரப்படும்.
- ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் ஒரு நாள் வேலைக்கு ரூ. 400 வழங்கப்படும்.
- பால்புதுமையினர் (LGBTQIA+) நல சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிப்படுவதற்கான சட்டம் இயற்றப்படும்.
- 10 ஆண்டுகளில் எவ்வித விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய சட்டங்களை ஆய்வு செய்து மாற்றங்கள் செய்யப்படும்.
- பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களைத் தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும்.
- 2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை.