மக்களவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியை அடுத்து நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவியேற்று கொண்டார். இதனையடுத்து பிரதமருக்கு அடுத்தப்படியாக உள்ள அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்ற 8 நாட்களில் 10 தீவிரவாத அமைப்பு பட்டியலை வெளியிட்டு, அவற்றை காலி செய்யவும் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் கூறுகையில்;- மத்திய உள்துறை அமைச்சராக, அமித் ஷா பொறுப்பேற்றதும், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து, உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் ஜம்மு - காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலர் ராஜிவ் கவுபா, ஐ.பி., உளவு அமைப்பின் தலைவர் ராஜிவ் ஜெயின்; 'ரா' உளவு அமைப்பின் தலைவர் அனில் தாஸ்மானா மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது ஜம்முவில் தீவிரவாக செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் அவற்றின் அமைப்புகள் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டது. 

அப்போது பேசிய, அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் உட்பட நாட்டின் எந்த பகுதியிலும் தீவிரவாதம் இருக்கக் கூடாது. தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மாநில நிலவரம் குறித்து, மூன்று முறை கூடி பேசிய அதிகாரிகள், தீவிரவாதிகள் பட்டியலையும், அவர்களை ஒடுக்குவதற்கான வியூகத்தையும் வகுத்துள்ளனர். 

இதனையடுத்து ஒடுக்கப்பட வேண்டிய தீவிரவாத அமைப்புகள், அவற்றின் முக்கிய தலைவர்கள் பட்டியல் அளித்தனர். இவற்றை காலி செய்யும் அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.