நாட்டில் அதிகரித்து வரும் பசுக்கொலையைத் தடுக்கும் வகையில் புலிகளுக்கு இருக்கும் சரணாலயம் போல், பசுக்களைப் பாதுகாக்க பசுக்கள் சரணாலயத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் பல்வேறு மாநிலங்களில் பசுவதை தடை செய்யப்பட்டுள்ளது. பசு கடத்தல், கொல்லும் நபர்களை பிடித்து சட்டத்தின் உதவியுடன் அரசு தண்டித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலரும் சட்டத்தை கையில் எடுத்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அப்பாவிகளை சிலர் அடித்து கொன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன.  தொடர்ந்து நடந்து வருகின்றன

இதையடுத்து, பசுக்களை பாதுகாக்கவும், வயதான பசுக்களை கொல்லாமல் விவசாயிகளிடம் இருந்து பெற்று பாதுகாக்கவும் பசுக்கள் சரணாலயம் அமைக்க மத்திய அரசு பரிசீலணை செய்து வருகிறது.

இது குறித்து மத்திய உள்துறை இணைஅமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஜி. அகிர் கூறுகையில், “ புலிகளைப் பாதுகாக்க சரணாலயம் அமைக்கப்பட்டது போல், பசுக்களைப் பாதுகாக்க பசுக்கள் சரணாலயம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலணை செய்து வருகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற பசுக்கள் சரணாலயம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பசு கொலையை தடுப்பது அவசியம். இப்போதுள்ள பிரச்சினை என்பது வயதான பசுக்களை யார் பாதுகாப்பது என்பதுதான்.

அதற்காக இந்த சரணாலயத்தை தொடங்கி வயதானபசுக்களை பராமரிக்க முடியாத விவசாயிகள், இங்குவந்து விட்டுவிடலாம்.

அங்கு இந்தபசுக்களுக்கு தேவையான உணவுகள், புல் போன்றவற்றை வழங்கலாம். இதன் மூலம் வரும்காலத்தில் பசுக்கொலையை முற்றிலும் தடுத்துவிட முடியும். இது தொடர்பாக நான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் பேசி வருகிறேன். விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்” என்று தெரிவித்தார்.