நான் நினைத்தால் எப்ப வேண்டுமானாலும் முதல்வராக வர முடியும். ஆனால், அதில் விருப்பம் இல்லை, என்று நடிகை ஹேமமாலினி கூறியுள்ளார். பாலிவுட் நடிகை ஹேமமாலினி தற்போது பாஜக எம்பி பதவி வகிக்கிறார். பரதநாட்டியத்தில் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள ஹேமமாலினி, பன்ஷாரா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதாக வரும் தகவல்களை மறுத்தார். 

மேலும் அவர் கூறுகையில், பாலிவுட் படங்களில் நடித்ததன் மூலமாக எனக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக கிடைத்தது. அதனால்தான் நான் தற்போது எம்பி பதவியில் உள்ளேன். சினிமா படங்கள்தான் எனக்கு இந்த பிரபலத்தை கொடுத்தன. அதேசமயம், நான் தற்போது உத்தரப்பிரதேச முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதாக, தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதில் உண்மையில்லை. நான் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் உடனடியாக, முதல்வர் பதவியை பெற முடியும்.

அப்படிச் செய்ய எனக்கு விருப்பம் இல்லை. இப்போதைக்கு, எனது மதுரா தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக ஆட்சி செய்துவருகிறார். அவர் பற்றி எதிர்க்கட்சிகள் சொல்வதில் உண்மையில்லை. மக்களுக்கான பணியில் ஈடுபடும் அவர்போன்ற உண்மையான பிரதமரை பார்ப்பது அரிது, எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், முதல்வர் பதவி என்பது நெருக்கடி நிறைந்த ஒன்று. கிட்டத்தட்ட தாலி கட்டியதை போன்றதாகும். ஒருமுறை அப்படி ஆகிவிட்டால் நம்மால் அதை விட்டு எளிதில் விலக முடியாது. தனிப்பட்ட நலன்களை பார்க்க முடியாது. எனக்கு எனது தனிப்பட்ட சுதந்திரம் ரொம்ப முக்கியம்,’’ என்றும் தெரிவித்தார். ஹேமமாலினிக்கும், பாஜக தலைவர்களுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் செல்வாக்கான பதவிக்கு ஆசைப்படுவதாகவும், கட்சி வட்டாரங்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.