சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக் ஷா பந்தன் பண்டிகை நேற்று நாடுமுழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், சற்று வித்தியாசமாக பெண்கள் தங்களின் சகோதரர்களுக்கு ராக்கி  ‘ஹெல்மெட்’ பரிசாக அளித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.பி. கவிதா ராவ், ‘சிஸ்டர்ஸ் பார்சேஞ்ச்’ (மாற்றத்துக்கான சகோதரிகள்) என்ற பிரசாரத்தை முன்னெடுத்து, தனது சகோதரான மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி. ராமா ராவ் கையில் ராக்கி கயிறு கட்டி, பின் ஹெல்மெட் பரிசாக அளித்து தொடங்கி வைத்தார்.

சமூக ஊடகங்களில் வௌியான இந்த படத்தைப் பார்த்த ஏராளமான பெண்கள், தங்களின் சகோதரர்களின் உயிரைக் காக்கும் ஹெல்மெட்டை பரிசாக அளித்து, அந்த புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

இரு சக்கர வாகனங்களை ஓட்டும் சகோதரர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அக்கறையுடன் சகோதரிகள் இந்த ஹெல்மட்டைபரிசாக அளிக்கிறார்கள் என்ற விளக்கத்துடன் இந்த பிரசாரத்தை கவிதா முன்னெடுத்தார்.

இது குறித்து எம்.பி. கவிதா வௌியிட்ட அறிவிப்பில் “ நம்முடைய சகோதரர்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது, இந்த நேரத்தில் ஒவ்வொரு பெண்ணின் கடமையாகும். வழக்கமான பரிசுகள் கொடுக்கும் கலாச்சாரத்தை மாற்றி, சகோதரர்களின் உயிரைக் காக்கும் ஹெல்மெட்டை அளிப்போம். அதற்காகவே ‘சிஸ்டர்ஸ் பார் சேஞ்ச்’ பிராசரம் தொடங்கப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலில்உயிரிழப்பவர்ளைக் காட்டிலும், இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழப்போர்தான் அதிகம்.’’ எனத் தெரிவித்து இருந்தார்.

எம்.பி. கவிதாவின் இந்த புதிய, ஆக்கப்பூர்வமான பிரசாரத்தை கிரிக்கெட் வீரர்கள்கவுதம் கம்பீர், வீரேந்திர சேவாக் பாராட்டி , வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், நடிகர்கள் ராகுல் தேவ், பிரியத்ஷி, இயக்குநர் மதுரா தர் ஆகியோரும் பிரசாரத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாக பாராட்டியுள்ளனர். மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, எம்.பி. பூனம் மகாஜன் ஆகியோரும் கவிதாவின் பிரசாரத்தை வரவேற்றுள்ளனர்.