உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் 7 பேர் பயணம் செய்தனர். முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இச்செய்தியை உறுதிப்படுத்தி மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 7 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, ஒரு குழந்தை உள்பட பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த ஹெலிகாப்டர், அதிகாலை 5:20 மணிக்கு கவுரிகுண்ட் பகுதியில் ரேடாரில் இருந்து காணாமல் போனது. பின்னர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தெரியவந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, "ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது மிகவும் வருத்தமான செய்தி. மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), உள்ளூர் நிர்வாகம் மற்றும் பிற மீட்புக் குழுக்கள் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அனைத்து பயணிகளின் பாதுகாப்புக்காக பாபா கேதாரை நான் பிரார்த்திக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

குஜராத் விமான விபத்து நடந்த சில தினங்களில் இந்த விபத்து நடத்திருக்கிறது. தொடர்ச்சியான இந்த விமானப் போக்குவரத்து விபத்துகள் பயணிகள் மத்தியில் தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளன. குறிப்பாக, புனித யாத்திரைக்கான ஹெலிகாப்டர் சேவைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் விமான விபத்து:

இந்தத் துயரச் சம்பவம், அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 270 பேர் உயிரிழந்த சில நாட்களுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 (AI171) ரக விமானம், டேக்-ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

அருகிலுள்ள மேகானினகர் பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் வளாகத்தில் விமானம் விழுந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களில் ஒருவர் தவிர அனைவரும் உயிரிழந்தனர். விமானம் விழுந்த இடத்தில் இருந்த ஐந்து எம்பிபிஎஸ் மாணவர்கள் உட்பட 29 பேரும் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தனர்.