Asianet News TamilAsianet News Tamil

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு இதுதான் காரணம்... வெளியானது அதிர்ச்சி தகவல்!!

முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 12 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் திடீரென வானில் தோன்றிய உறுதியான மேகங்கள் காரணமாக விமானிகள் சூழலின் மீதான கண்காணிப்பை இழந்ததே விபத்திற்கான முக்கிய காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

helicopter crash inquiry report filed to defence minister
Author
India, First Published Jan 14, 2022, 9:18 PM IST

முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 12 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் திடீரென வானில் தோன்றிய உறுதியான மேகங்கள் காரணமாக விமானிகள் சூழலின் மீதான கண்காணிப்பை இழந்ததே விபத்திற்கான முக்கிய காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர் மார்ஷல் மான்வேந்திர சிங் தலைமையிலான முப்படைகளின் விசாரணையில், கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி அன்று நிகழ்ந்த இந்த விபத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளோ, வேறுவிதமான நாசகர வேலைகளோ, தாக்குதல்களோ ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. கடுமையான நிலப்பரப்புகளில் கட்டுப்பாடு இழப்பதால் ஏற்படும் விபத்தாக இந்த நிகழ்வு கூறப்பட்டு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இந்திய விமானப் படையின் தலைமை ஏர் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி, ஏர் மார்ஷல் மான்வேந்திர சிங் ஆகியோர் அறிக்கை வழங்கியுள்ளனர். சூழல் குறித்த விழிப்புணர்வை ஒரு விமானி இழக்கும் போது, அவர் தவறுதலாக அங்குள்ள நிலம், மலை, மரம், நீர்நிலை முதலான தடைகளின் மீது மோதிவிடும் ஆபத்து ஏற்படுகிறது.

helicopter crash inquiry report filed to defence minister

பாதுகாப்புத் துறையும், இந்திய விமானப் படையும் இந்த விசாரணை அறிக்கை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. வழக்கமான நடைமுறைகள் மீறப்பட்டனவா, விமானிகள் தரப்பில் ஏதேனும் பிழை ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.  மிகவும் தாழ்வாக Mi-17 V5 ஹெலிகாப்டர் பறந்த போது, அடர்த்தியான மேகங்களுக்குள் நுழைந்தது எதிரில் இருப்பவற்றைப் பார்க்க விடாமல் தடுத்ததாகவும், மேகத்தில் இருந்து வெளியேற முயன்றதில் மலைப்பகுதியின் மீது இந்த ஹெலிகாப்டர் மோதியதாகவும் கூறப்பட்டுள்ளது.  இதன் விமானிகளான விங் கமாண்டட் ப்ரித்வி சிங் சௌஹான், ஸ்குவாட்ரான் லீடர் குல்தீப் சிங் ஆகிய இருவரும் விமானம் இயக்குவதிலும், அனுபவத்திலும் மிகவும் தேர்ந்ததோடு, மாஸ்டர் க்ரீன் அந்தஸ்து பெற்றவர்கள். மேகங்களுக்குள் ஹெலிகாப்டர் சென்ற போது, நிலத்தில் இருந்த நிலையங்களுக்கு எந்த விதமான அழைப்புகளோ, உதவிக்கான அழைப்போ அனுப்பப்படவில்லை.

helicopter crash inquiry report filed to defence minister

விவிஐபிகளின் விமானப் பயணத்திற்கான வழிமுறைகளையும், வழக்கமான நடைமுறைகளையும் மேம்படுத்துவதற்காக இதுபோன்ற விமானப் பயணங்களில் மாஸ்டர் க்ரீன் அந்தஸ்து கொண்டவர்களோடு பிற விமானிகளும் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், நிலத்தில் இருக்கும் நிலையங்களில் இருந்து தேவைப்படும் போது உதவிபெற வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ ஆலோசகர் பிரிகாடியர் எல்.எஸ்.லிட்டர் முதலானோர் பயணித்த Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் சூலூர் விமானத் தளத்தில் இருந்து கிளம்பி, வெலிங்டன் விமானத் தளத்தில் தரையிறங்குவதற்கு 7 நிமிடங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கியது. இந்த விசாரணையில் விபத்துக்கு உள்ளான ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட கறுப்புப்பெட்டியில் இருந்த தகவல்கள், விபத்துப் பகுதியில் மக்கள் பதிவு செய்த வீடியோக்கள் ஆகியவையும் விசாரணை செய்யப்பட்டன.

Follow Us:
Download App:
  • android
  • ios